எடப்பாடி பழனிசாமி இதுக்காக தான் டெல்லி போனாராம்.. ‘குடும்பம்’ - கொளுத்திப் போட்ட கோவை செல்வராஜ்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களைக் காப்பாற்றுவதற்காகவே டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார் எனப் பேசுகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் இடையே நிலவி வரும் தொடர் மோதலுக்கு மத்தியில் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. நேற்று அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் அலையடித்து வருகின்றன. அதிமுக விவகாரத்தில் தனக்கு ஆதரவு கோரியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் குடியிருப்பு கட்டுவதில் ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ்ஸின் டெல்லி பயணத்திற்கு பின்னணியில் இந்த விஷயமும் இருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.

டெல்லியில் ஈபிஎஸ்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று முன்தினம் இரவு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் சென்றனர். டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் பல முக்கிய புள்ளிகளையும் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் ஈபிஎஸ்ஸின் டெல்லி பயணம் ஏன் என்பது பற்றிப் பேசியுள்ளார்.

எடப்பாடி டெல்லி சென்றது ஏன்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களால் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு பணம் கொடுத்த பிரச்சனையில் லோக் ஆயுக்தாவில் மாட்டிக் கொண்டுள்ளனர். இந்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

குடும்பத்தைக் காப்பாற்ற
அதிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் தனது மகனை காப்பாற்ற, மருமகளை காப்பாற்ற டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக கூறுகிறார்கள். அது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முகத்தைத் தொடங்கப்போட்டுள்ளதைப் பார்த்தால் ஏதோ பிரச்சனை இருப்பதன் காரணமாகவே இப்படி இருப்பது தெரிகிறது.

இவரெல்லாம் பேசலாமா
பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் தகுதி இல்லை. 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பண்ருட்டி ராமச்சந்திரனை தான் டெல்லிக்கு அனுப்புவார் எம்.ஜி.ஆர். பண்ருட்டி ராமச்சந்திரன் போன கட்சி விளங்காது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கட்சியை அழிப்பது ஈபிஎஸ்
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பண்ருட்டி ராமச்சந்திரன் தான். மத்தியில் அமைச்சராக பாமகவுடன் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். தேமுதிக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தேமுதிக இருந்தது. அவர் செல்லும் இடம் ஆலமரம் போல் விருட்சம் அடையும். எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு தான் கட்சியை நான்காகப் பிளந்து கட்சியையே அழித்துக் கொண்டிருக்கிறார்.

ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பார்
எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்காக ஒரு சொட்டு வியர்வை சிந்தியிருப்பாரா? சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு பதவி வாங்கி கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த நேரம் ஈபிஎஸ் ரோட்டில் சுற்றிக் கொண்டிருப்பார். ஜெயலலிதா இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டு முறை முதலமைச்சராகவும் ஆக்கினார்கள்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications