எடப்பாடி படத்தை லெட்டர் பேடில் போட்டு.. அவரையே நீக்க சொன்ன அதிமுக நிர்வாகி.. நடந்த ட்விஸ்ட்
சென்னை : இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை.. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி. எனவே அவரை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பஷீர். ஆனால் அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டது அதிமுக தலைமை.
Recommended Video
அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக இன்று வரை இருந்தவர் ஜே.எம்.பஷீர். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தது தொடர்பான ஆதாரங்களை வெளியிட உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க ஓ.பி.எஸ் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக பேட்டி அளிக்கப்போவதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் அடித்திருந்த லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரது படமும் முகப்பில் இருந்தது.

எடப்பாடி ஏற்கவில்லை
இந்நிலையில் பஷீர் சொன்னபடியே. சொன்னபடி, இன்று பிற்பகல் 3மணி அளவில் செய்தியாளர்களை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது . சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் எதையும் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

எடப்பாடி வரவில்லை
இஸ்லாமிய அறிஞர் காயிதே மில்லத் நினைவு நாளில் மற்றும் அவரது பிறந்த நாளில் ஒருநாள் கூட முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் அவரது சமாதிக்கு சென்று எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தவில்லை. எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள். ஐயா ஓபிஎஸ் கூட வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அப்போது அஞ்சலி செலுத்தினார் என்றார்.

தவறு இல்லை
சசிகலா பற்றி ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறிய சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பஷீர் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். இப்படி அவர் பேட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் போதே அதிமுக தலைமை அவரை பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் தூக்கிவிட்டது.

பஷீர் நீக்கம்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளதாலும, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த திரு. J.M.பஷீர்,(கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் பேட்டி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் இன்று அளித்த திடீர் பேட்டிக்கு என்ன காரணம்.. சிஏஏ குறித்து இவ்வளவு நாளாக அமைதியாக இருந்தவர் திடீரென பேட்டி அளித்தது ஏன், என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக தலைமை இவரை நீக்கிவிட்டது என்றாலும் சலசலப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications