முதலில் கனிமொழி.. மறுநாளே கமல்! சில்லு சில்லாக உடைந்த எடப்பாடியின் "அஸ்திரம்".. வேற வழியே இல்லையாமே?
சென்னை: அதிமுக சார்பாக மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அவரின் கூட்டணியில் யாரெல்லாம் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது.
பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

என்ன கூட்டணி
பலரும் இது அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக கூட்டணியாகவே இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். இந்த கட்சிகள் எல்லாம் நட்பாக இருப்பதால் அவர்களுடன்தான் எடப்பாடி கூட்டணி வைக்க போகிறார் என்று பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் எடப்பாடிக்கு நெருக்கமான அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில், எடப்பாடி மெகா கூட்டணி என்று குறிப்பிட்டதே காங்கிரஸ் + விசிக + மநீம கூட்டணியை மனதில் வைத்துதான் என்றனர். அதாவது பாஜகவுடன் கூட்டணி வைத்த தேர்தல் எதிலும் நாம் வெற்றிபெறவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரை கவர முடியவில்லை. அவர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை.

பாமக
அதேபோல் பாமகவுடன் கூட்டணி வைத்தால் தலித் வாக்குகள் கிடைப்பது இல்லை. கிடைக்க வேண்டிய வன்னியர் வாக்குகளும் வருவது இல்லை. அதனால் இனியும் பாஜக கூட்டணியில் நீடிக்க எடப்பாடி விரும்பவில்லை. அதனால்தான் காங்கிரஸ் + விசிக + மநீம கூட்டணியை மெகா கூட்டணியாக உருவாக்க எடப்பாடி முயன்று வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது மதசார்பற்ற கூட்டணியை திமுகவிற்கு எதிராக உருவாக்கி திமுகவின் அஸ்திரத்தை வைத்து திமுகவையே வீழ்த்த எடப்பாடி முயன்று வருவதாக கூறப்பட்டது. அரசியல் விமர்சகர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்து இருந்தனர்.

அரசியல் விமர்சகர்கள்
சமீபத்தில் ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிக்கையாளர் மணி கூட, எடப்பாடி நினைக்கும் மெகா கூட்டணி என்பது வேறு. அவர் பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார். பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரசுடன் இணைய நினைக்கிறார். காங்கிரசுடன் இணைந்தால் விசிக, கம்யூனிஸ்ட் தங்கள் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். இவர்களோடு பாமக, மக்கள் நீதி மய்யம் சேர்ந்தால் வெற்றிபெற முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் எடப்பாடியின் இந்த கூட்டணி கனவை சிதைத்து இருப்பதாகவே தோன்றுகிறது.

என்ன நடந்தது?
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை பாரத் ஜோடோ யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். ராகுல் - கனிமொழி இருவரும் இந்த யாத்திரையில் நட்பாக காணப்பட்டனர். அதேபோல் நேற்று முதல்வர் ஸ்டாலினும்.. ராகுல் காந்தி நேருவின் குரலில் பேசுகிறார். அவர் நேருவின் குரலை பேசுவதால் சங்பரிவார கும்பல்கள் அச்சத்தில் இருக்கின்றன என்று பேசினார். இந்த இரண்டு நிகழ்வும் திமுக + காங்கிரஸ் கட்சிகள் நட்பாக இருக்கின்றது என்பதையே காட்டுகிறது. திமுக காங்கிரஸ் இடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கிறது என்பதையே காட்டுகிறது.

திமுக காங்கிரஸ்
அப்படி இருக்கும் போது காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க சான்ஸே இல்லை என்ற நிலைதான் இப்போது நிலவுகிறது. இன்னொரு பக்கம் அதிமுகவில் இருந்து இதுவரை யாரும் பாரத் ஜோடோ யாத்திரைக்கு செல்லவில்லை, அழைக்கப்படவில்லை அல்லது அதைப்பற்றி பேசக்கூட இல்லை. அப்படி இருக்க காங்கிரஸ் - அதிமுக சேர்வதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. சரி கமல்ஹாசனாவது அதிமுக கூட்டணியில் இணைவார் என்று பார்த்தால், அவரும் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சனிக்கிழமை இந்த பேரணியில் கலந்து கொண்டார்.

மக்கள் நீதி மய்யம்
நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் + திமுக கூட்டணி உடையாத பட்சத்தில்.. கமலும் இதே கூட்டணியில் இணையாவே வாய்ப்பு உள்ளது.

கூட்டணி
அப்படி இருக்கையில் எடப்பாடி யாரை வைத்து மெகா கூட்டணி உருவாக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறது. திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான சமிக்கைகளை மநீம காட்டி வருகிறது. இன்னொரு பக்கம் விசிகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் ஸ்டாலின் - திருமா இருவரும் அவ்வளவு நட்பாக இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் எடப்பாடி யாருடன் மெகா கூட்டணி வைப்பார்.. மீண்டும் வேறு வழியே இல்லாமல் பாஜக + பாமக + தேமுதிக பக்கமே செல்வாரா? அப்படி சென்றால் ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொள்ள பாஜக அழுத்தம் கொடுக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருப்பதால், அதற்குள் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications