என்ன லாஜிக் இது? கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய பும்ரா.. நடராஜனை "ஒதுக்கிய" பிசிசிஐ.. நடந்தது என்ன?
சென்னை: இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக ஆடாத நிலையில் அவருக்கு மாற்றாக முகமது சிராஜ் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். இதை சில கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வந்தான்.. போனான்.. ரிப்பீட்டு என்று சொல்வது போலத்தான் தற்போது இந்திய அணியில் பும்ராவின் நிலைமை மாறி உள்ளது. பும்ரா இரண்டு போட்டிகளை சேர்ந்து ஆடுவது கூட தற்போது மிகப்பெரிய அதிசயம் ஆகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விடாமல் ஆடும் பும்ரா சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து காயம் காரணமாக ஆடாமல் ஓய்விற்கு செல்கிறார். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட்டது.

காயம்
இதனால் அந்த தொடரில் அவர் ஆடவில்லை. அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்கு திரும்பி வந்தார். ஒரு போட்டி மட்டுமே ஆடிய அவர் மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இப்போது டி 20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் ஆட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. தென்னாபிரிக்க தொடரில் மீதம் உள்ள போட்டிகளிலும் அவர் ஆட மாட்டார். அவர் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காயம் காரணமாக அவர் வெளியேறி உள்ளார்.

என்ன காயம்?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவருக்கு முதுகில் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. அவரின் பவுலிங் ஆக்சன் காரணமாக முதுகில் காயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர் தனது பவுலிங் ஆக்சனில் சில மாற்றங்களை செய்தால் காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். இதனால் அவருக்கு மாற்று வீரரை தேட வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்க தொடரில் அவருக்கு மாற்றாக சிராஜ் வந்துள்ளார்.

சிராஜ்
சிராஜ் கவுண்டியில் ஆடி வந்த நிலையில் தென்னாபிரிக்க தொடரில் அவர்தான் பும்ராவிற்கு மாற்று. இன்னொரு பக்கம் டி 20 உலகக் கோப்பை தொடரில் சிராஜ் அல்லது ஆவேஷ் கான் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் மாற்று வீரராக பும்ராவிற்கு பதிலாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய அணியில் பும்ரா போலவே யார்க்கர் போட கூடிய, நன்றாக ரன்களை கட்டுப்படுத்த கூடிய நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பும்ரா
சிராஜ் அவ்வளவு சிறப்பாக யார்க்கர் வீச மாட்டார். அப்படி இருக்கும் போது சிராஜை எடுத்தது என்ன லாஜிக் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நடராஜன் பும்ரா போலவே டெத் ஓவர்களில் மிக சிறப்பாக யார்க்கர் வீசுவார். அப்படி இருக்கும் போது அவரை இந்திய அணிக்குள் கொண்டு வருவதை பற்றி பிசிசிஐ யோசிக்கவே இல்லை. ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி 20 தொடரில் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்தார். அவ்வளவு சிறப்பாக அவர் பவுலிங் செய்தும் கூட அவருக்கு அதன்பின் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

மோசம்
இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரில் மோசமாக ஆடினார். புவனேஷ்வர் குமாரும் மோசமாக பவுலிங் செய்து வருகிறார். ஆனால் அவர்களுக்கு எல்லாம் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாறாக ஒரு தொடரில் நன்றாக ஆடியும் கூட நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவர் முன்பு காயத்தில் இருந்தாலும் இப்போது காயம் இல்லை என்பதால் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications