”எஸ்.ஐ.ஆர்” பணிகளை எதிர்ப்பது ஏன்? தனது படிவத்தை வெளியிட்டு ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
சென்னை: எஸ்.ஐ.ஆரை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதில் மக்கள் நிறைய பேருக்கு இன்னும் எஸ்.ஐ.ஆர் பற்றி முழுமையாக தெரியவில்லை என்றும், அவகாசம் தராமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் செய்வது சரியாக இருக்காது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேபோன்று எஸ்.ஐ.ஆரால் பாதிக்கப்படும் மக்கள் 08065420020 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து எஸ்.ஐ.ஆரின் சதிவலையில் சிக்காமல் வாக்குரிமையை பாதுகாப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவசரம் அவசரமாக செய்வது ஏன்?
எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் அவசரம் காட்டுவதையே எதிர்க்கிறோம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தத்தை மேற்கொள்வது ஏன்? தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதே நமது நிலைப்பாடு.
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?#SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 9, 2025
S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் pic.twitter.com/LPjsNsHJqv
தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பாஜக எப்படியெல்லாம் மோசடி செய்துள்ளது என்று ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஏற்கனவே விளக்கியுள்ளார். பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் அறிவித்த உடனேயே இது சதி என்று நாமும் எதிர்த்தோம்.
உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்
அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் கொண்டு வந்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எஸ்.ஐ.ஆருக்காக வழங்கப்படுகிற கணக்கீட்டு படிவத்தில் எத்தனை குழப்பங்கள் இருக்கின்றன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கும் அந்த படிவத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
உங்களிலிருந்து சிலரின் கைகளிலும் இந்த படிவம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். முதலில் இந்த படிவத்தில் நமது விவரங்களை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக முந்தைய வாக்காளர் திருத்தப்பட்ட பட்டியலில் உள்ள வாக்காளர் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? எல்லாருமே தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள்.
பெயரை நீக்கும் ஆபத்து உள்ளது
இதில் ஏதாவது தெளிவு உள்ளதா? வாக்காளர் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில் முதலில் பெயரும் பிறகு வாக்காளரின் அடையாள அட்டை எண்ணும் கேட்கப்பட்டுள்ளது. மூன்றாவது, மீண்டும் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. முதலில் யாருடைய பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ, அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்தும் உள்ளது.
எஸ்.ஐ.ஆரால் பாதிக்கப்படும் மக்கள் 08065420020 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு எஸ்.ஐ.ஆரின் சதிவலையில் சிக்காமல் வாக்குரிமையை பாதுகாப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications