Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிகள்-கல்லூரிகள் திறப்பதை ஏன் தள்ளிப்போட வேண்டும்? 2ம் அலை அபாயத்தை விளக்கும் மருத்துவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகள்-கல்லூரிகள் திறப்பதை ஏன் தள்ளிப்போட வேண்டும்? என்ற காரணத்தை பேராசிரியரும், மருத்துவருமான முத்துச் செல்லக் குமார் விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், "அப்பாடா ! கொரோனா கொஞ்சம்,கொஞ்சமாக குறைந்து வருகிறது, இறப்பும் குறைந்து வருகிறது.
என்று மக்கள் ஓரளவு மன ஆறுதல் அடைந்து வருகின்ற நேரத்தில், பள்ளிகள்-கல்லூரிகள் நவம்பர்-16 ந் தேதி திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, பெற்றோர்கள்,மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டிலிருந்து தொடங்குவோம்

வீட்டிலிருந்து தொடங்குவோம்

பள்ளி மாணவர்களின் நிலை: பள்ளி மாணவர்களில் சிலர் சொந்த வாகனத்தில் வந்துவிடலாம். பலர் ஆட்டோக்களிலும்,ஷேர் ஆட்டோக்களிலும்,வருகின்றனர்.இங்கு எப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியும்? ஆட்டோக்காரர் இவர்களை இறக்கி விட்டு சும்மா இருப்பாரா?இவர்களை மாலையில் மீண்டும் பிக்அப் செய்யும் வரை,பொது ஜனங்களை ஏற்றி,இறக்கி தெரியாத பலரையும் பார்த்துவிடுவார். ஆக,இவர்களால் ஆட்டோகாரருக்கும்,அவர் மூலமாக, மாணவர்களுக்கும் தொற்று எளிதில் பரவி விடும்.

ஒரு மாணவனின் தொற்றால் ஆட்டோவில் பயணம் செய்யும் பிற மாணவர்களுக்கும், எளிதில் பரவி விடும். மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றால்,பயணம் செய்யும் பயணிகளுக்கும்,பொது மக்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வேன்களில் கும்பலாக வரும் மாணவர்கள்: சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றால், ஒரு வேனுக்கு பதிலாக மூன்று வேன்களைக் கொண்டு வர வேண்டும்.

கல்லூரி மாணவர்களின் நிலை: இன்னும் பெரும்பாலனோர், அரசாங்க பேருந்துகளையும்,எலக்டிரிக் டிரெயினையும் நம்பி இருக்கிறார்கள்.இவர்கள் முதலில் வீட்டிலிருந்து பேருந்து நிலையம் வர வேண்டும்.பிறகு அங்கிருந்து பஸ் பிடிக்க வேண்டும்..சிலரோ 2-3 பஸ்கள் பிடித்து வரும் நிலையில் உள்ளனர்.
இன்னும் சிலரோ,ஆட்டோ பிடித்து,பஸ் பிடித்து,டிரெயின் பிடித்து பின்பு நடந்துவரும் சூழல் நிலையில் கூட உள்ளார்கள்.

தனியார் கல்லூரிகளின் பஸ்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். மாணவர்கள் இருக்கைகள் நெருக்கமாகவே அமர்ந்து செல்லும் நிலையில் தான் இருக்கிறது. அதுவும் காற்றோட்டமில்லாமல் !

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றால்,ஒரே ரூட்டிலேயே பல பஸ்களை விட வேண்டும். இப்படி ஒவ்வொரு ரூட்டிலும் பல பஸ்கள் என்றால், இது நடைமுறையில் சாத்தியமாகுமா?

பள்ளி/கல்லூரி போனவுடன்...

பள்ளி/கல்லூரி போனவுடன்...

பாடம் எடுக்கின்ற அறையில் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு,சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்கலாம்.
150 மாணவர்கள் என்றால் ஒரே அறையில் அனைவரையும் அமர வைக்க முடியாது.40-50 மாணவர்களைத் தான் அமர வைக்க முடியும். மீதமுள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் தான் பாடம் எடுக்க முடியும்.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏசியுடன் (Central air conditioning)ஜன்னல்,கதவுகள் மூடப்பட்டிருக்கும். மாணவர்கள் சுவாசிக்கும் காற்று அறையிலேயே சுழன்று கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்ட மாணவனிடமிருந்து மற்ற மாணவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம். மேலும்,முகக்கவசத்தை நாசி ஒவ்வாமை உள்ளவர்களால் தொடர்ந்து அணிய முடியாமல் சிரமப்படுகிறார்கள். கைகளை அடிக்கடி கழுவுவதை முறையாக, உரிய நேரத்தில்,அனைத்து மாணவர்களும் செய்ய வேண்டும் என்பது ஒரு சவாலான காரியம் தான்.

உணவு உண்ணுமிடத்தில்..

உணவு உண்ணுமிடத்தில்..

மாணவர்கள் மதியம் உணவு உண்ணுமிடத்தில் மாஸ்க்,கிளவுஸ் இல்லாமல் இருப்பார்கள்.ஆயிரக்கணக்கில் மாணவர்கள்
படிக்குமிடத்தில்,இவர்கள் அனைவரும்,சமூக இடைவெளி விட்டு அமர்ந்து உண்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தொற்று எளிதல் பரவ இங்கும் வாய்ப்புகள் அதிகம்.

மாணவர்கள் தங்கும் விடுதிகளில்...
உணவு விடுதிகளில்...
கழிப்பறை/குளியலறைகளில்...
ஆகிய பொதுவான இடங்களில் மாணவர்கள்,சமூக இடைவெளியைக்கடைபிடிப்பது மிகவும் கடினமானது.

இரண்டு முக்கிய நிகழ்வுகள்:

தற்சமயம்,இரண்டு முக்கிய நிகழ்வுகளை நாம் எதிர் நோக்கி உள்ளோம்.
1.தீபாவளி பண்டிகை

2.மழைக்காலம்.

1.தீபாவளி பண்டிகை

1.தீபாவளி பண்டிகை

நமது நாட்டில், மாநிலங்களில், ஒரு பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்கு அதிகமாக கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். தற்சமயம் வர இருக்கின்ற தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதுவுமே கொண்டாடப் போகிறது. இதற்காக, மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக தயாராகி வருகிறார்கள்.அத்துடன் தமிழகத்தின் முக்கிய வீதிகளில் ஆடை,பண்டிகைப் பொருட்கள்,பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. எனவே, இந்தப் பண்டிகையும் பிற பண்டிகைப் போல தொற்றை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

2.மழைக்காலம்.

2.மழைக்காலம்.

வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் நீர் தேக்கத்தால் கொசுக்கள் பெருகும்.இதனால்,டெங்கு,மலேரியா,சிக்கன்குனியா காய்ச்சல்களும்,பரவும்.மேலும்,இந்த சூழ்நிலையில் இன்ஃபுளுவென்சா (Influenza) எனப்படும் ஃபுளூ காய்ச்சல், ஸ்க்ரப் டைபஸ் வகை காய்ச்சலும் ஏற்படலாம். எப்போதும் நிலவும் டைபாய்டு காய்ச்சல் எப்போது வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆக,கொரோனா ஒரு புறம் அதிகரிக்க,மறு புறம் இந்தத் தொற்றுகளையும் மக்கள் சந்திக்க நேரிடும். மாணவர்களும் மேற்கூறிய தொற்றுகளுக்கு அதிகமாக ஆட்பட நேரிடும். மாணவர்களில், உடல் பருமன்,நீரிழிவு,ரத்த அழுத்தம்,ஆஸ்துமா,எதிர்ப்பாற்றல் நோய்கள், (Autoimmune disorders) (உ.ம் லூபஸ் பாதிப்பு) ரத்த நாள பிரச்சனைகள்,இதய வால்வு நோய்,காச நோய், என பல்வேறு நோய்கள் உள்ளவர்களும்,எதிர்ப்புத் திறன் குன்றியவர்களும் கோவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்படவும்,நோயின் தன்மை இவர்களுக்கு தீவிரம் அடையவும் வாய்ப்புகள் உள்ளது.

வீட்டிலிருந்து செல்லும் மாணவர்கள் என்றால்....

வீட்டிலிருந்து செல்லும் மாணவர்கள் என்றால்....

இவர்களுக்கு மேற்கூறிய பல காரணங்களால் தொற்று ஏற்படுவதுடன், இவர்களால், வீட்டிலுள்ள பெரியவர்களும்,முதியவர்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. உதாரணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்: ஆந்திராவில் பள்ளி தொடங்கிய 4 நாட்களில் 829ஆசிரியர்களும்,575 மாணவர்களுக்கும் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளார்கள். இது போன்றே பிற மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஏன் உலகின் பல்வேறு இடங்களிலும் இரண்டாவது அலை என்ற பெயரில் இதனைப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியாவில்,தாய்லாந்து,மலேசியா, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும், இஸ்ரேல் நாட்டிலும், ஐரோப்பியாவில் பெரும்பாலான நாடுகளிலும்,,மீண்டும் கல்விக்கூடங்களை மூடவும்,லாக் டவுனை நடைமுறைப்படுத்தவும் முயன்று வருகின்றன.

இரண்டாம் அலையைத் தடுக்க...

இரண்டாம் அலையைத் தடுக்க...

நோயாளிகளின எண்ணிக்கையை குறைத்தோம்,இறப்பு விகிதத்தையும் குறைத்தோம்,இந்த நேரத்தில் அதை மேலும் குறைத்து,தொற்று பரவும் R0 ('ஆர்' வீதம் -இனப்பெருக்கம் காரணி) ஆர்.எண்ணை 1 க்கும் கீழாக கொண்டு வர முனைய வேண்டும். தொற்றுநோயியல் நிபுணர்களின் கணிப்புப்படி, ஆர் எண் 1 க்குக் கீழே குறையும் போது தான் இரண்டாம் அலையைத் தடுக்க முடியும்.

மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இது வைரஸ் பரவலை,பாதிப்பை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர உதவும். எனவே தடுப்பூசி வரும் வரை, இக்கட்டான இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்களையும் கடக்க வேண்டும்.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

நமது மக்கள் வெளிநாட்டு செய்திகளைப் பார்த்துவிட்டு, இங்கு இரண்டாம் அலை எப்போது வரும்? மூன்றாம் அலை எப்போது வரும்? என்று பயத்துடன் கேட்கிறார்கள். மக்கள் அலை,அலையாய் தேவையில்லாமல் வெளியில் அலையாமல் இருந்தாலே கொரோனாவின் அடுத்து வரும் அலைகளைத் தடுக்க முடியும் . நமது நாடு மக்கள் தொகை மிகுந்த நாடு.அதிலும் மிகவும் நெருக்கமாக வாழ்கிறோம். எனவே மிகுந்த முன்னெச்சரிக்கையுன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்றாலே, கண்டிப்பாக முறையாக முகக்கவசம் அணிய வேண்டும்.முறையாக கை கழுவுதல்,சமூக இடைவெளி என்ற இந்த மூன்றையும் மக்கள், தாரக மந்திரமாக கொள்ள வேண்டும்...

அரசு ஆலோசனை

அரசு ஆலோசனை

எனவே,தமிழக அரசு, பள்ளிகள்-கல்லூரிகள் திறப்பதைக் குறித்து மேற்கொண்டிருக்கும் ஆலோசனையை நாம் வரவேற்க வேண்டும். பள்ளிகள்-கல்லூரிகள் திறப்பதை அடுத்து சில மாதங்கள் தள்ளிப்போட வேண்டும். இதன் மூலம் தொற்றை மேலும் குறைத்து,இரண்டாம் அலை இங்கு ஏற்படாமல்,மக்களையும்,மாணவர்களையும் காப்பாற்றி அவர்களது ஆரோக்கியத்திற்கு அரணாக விளங்க வேண்டும். ஏனென்றால் ,இரண்டாம் அலை, முதல் அலையை விட ஆபத்தானது என்பதை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+