ஜனாதிபதி வருவதை இதேபோல அன்றும் தடுத்தனர்.. கருணாநிதி என்ன செய்தார்? நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் வருவதாக இருந்த நிலையில் அவர் வரவில்லை. இந்நிலையில் இன்று இதுகுறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இதேபோல நடந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை கடந்த ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணத்தால் மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி வரவில்லை: இதையடுத்து, இந்த மருத்துவமனையை ஜூன் 15-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், குடியரசுத் தலைவர் வருகை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை எவ்வித தகவலும் தெரிவிக்காததால், இந்த மருத்துவமனையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தபோது, ரிப்பன் வெட்டி திறக்க மருத்துவப் பணியாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கத்தரிக்கோலை வழங்கினர். அதற்கு ஸ்டாலின், நீங்களே திறந்து வையுங்கள் எனக் கூறினார். மருத்துவப் பணியாளர்கள் கையிலேயே கத்தரிக்கோலை கொடுத்து, அவர்களுடன் இணைந்து ரிப்பன் வெட்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேச்சு: பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கருணாநிதியை டாக்டர் கலைஞர் என்றுதான் அழைப்பார்கள். கருணாநிதி மெடிக்கல் படித்த டாக்டர் அல்ல, சோசியல் டாக்டர். சமூக மருத்துவர் அவர். தமிழ்ச் சமுதாயத்தின் நோய்களை குணப்படுத்திய சமூக மருத்துவர் கருணாநிதி. நான் கோட்டையில் இருந்தாலும் குடிசைகளைப் பற்றியே நினைப்பவன் என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி.
முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் நாள் தனது பிறந்தநாளை விளிம்பு நிலை மக்களுக்கான நாளாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தொடங்கும் நாட்களாக அதனைக் கொண்டாடியவர் கருணாநிதி. நாட்டிற்கே முன்மாதிரியான, ஏழை எளிய மக்களுக்கான 'முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்' கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.

1975ல் என்ன நடந்தது: கருணாநிதி எந்த அளவுக்கு ஏழை எளிய மக்களின் காவலராக இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறான 'நெஞ்சுக்கு நீதி' எழுதினார். நெஞ்சுக்கு நீதியின் முதல் பாக வெளியீட்டு விழா 1975 ஜனவரி 12ஆம் நாள் நடப்பதாக ஏற்பாடானது. கலைவாணர் அரங்கில் நடைபெற இருந்தது.
நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தை வெளியிடும் விழாவில் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி கலந்துகொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நூலை பெற்றுக்கொள்ள அன்றைய தமிழ்நாடு ஆளுநர் கே.கே.ஷா வருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். கடைசி நேரத்தில், இதோ இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் குடியரசுத் தலைவரை வர விடாமல் சிலர் தடுத்து விட்டார்கள்.
சோதனைகள்: அதைப் பற்றியெல்லாம் கருணாநிதி கவலைப்படவில்லை. நெஞ்சுக்கு நீதியின் முதல் பாக வெளியீட்டு விழாவை எப்படி நடத்தினார் தெரியுமா? வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தவர் கண்ணொளி அற்றவரும், தமிழ்நாடு விழியிழந்தோர் சங்கத் தலைவருமான நல்லதம்பி. நூலை வெளியிட்டவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த கவிஞர் முகமது அலி.
நூலை பெற்றுக்கொண்டவர் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான செல்வி சாந்தகுமாரி. சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்து அதனைப் பெற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் அந்த நிகழ்வுக்கு வராதது பற்றி தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி 24 மணி நேரம் நீடித்ததில்லை என்று கருணாநிதி எழுதினார்.
இப்படி பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் கருணாநிதி வளர்ந்தார். இப்போது நாமும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். கருணாநிதிக்கு சோதனைகள் கொடுத்தவர்கள் காலச் சக்கரத்தில் மறக்கப்பட்டு விட்டார்கள்." என உணர்ச்சி பொங்கப் பேசினார்.












Click it and Unblock the Notifications