Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த அண்ணாதுரை 1969இல் அமெரிக்கா சென்று அங்குள்ள மாணவர்கள் மத்தியிலே பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன விளக்கம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.

ஆட்சிக்கு 1967இல் வந்த அண்ணாதுரை 1969 இல் அமெரிக்காவுக்குச் சென்றார். ஆட்சிக்கு வருவதற்கு ஒரு ஆண்டு முன் திமுகவுக்கு தமிழ்நாட்டில் 5 ஆயிரம் கிளைகள் இருந்தன. 5 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் இருந்தனர். கூட்டணி பலத்தோடு காமராஜ் ஆட்சியை அவர் வீட்டுக்கு அனுப்பினார். இன்று அண்ணா மறைந்து 57 ஆண்டுகள் ஓடிவிட்டன.

Why was the trilingual policy in effect for 6 months during DMK regime Anna explanation in US

திமுக இந்திய அளவில் பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத் தரவுகள் படி 2 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் அதற்குப் பக்க வாத்தியங்கள் இல்லை. அதாவது கட்சிக்குள் இதர அணிகள் பெரிதாக இல்லை. இன்றைக்கு இளைஞரணி தொடங்கி ஐடி விங் வரை 25 அணிகள் கட்சியின் வெற்றிக்காக உழைக்கின்றன. இது மாபெரும் மாற்றம்.

'தென்னாட்டு பெர்னாட் ஷா'

அண்ணாதுரை தன் பேச்சாற்றலால் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அது மட்டுமே அவரது ஆயுதம். அவரது நாவில் தமிழ் நடனமாடியது. அருவிபோல் அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். அவருக்கு இணையான தலைவர்களை இன்று திமுகவில் காணமுடியவில்லை. யாரையும் வசை பாடாமல், பண்பான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு எதிராளிகளை அவர் மடக்கினார்.

அவரின் கரகரத்த குரல் ஒலிபெருக்கியில் பல லட்சம் மக்களை வசீகரத்தது. அண்ணாதுரையின் பேச்சைக் கேட்டு மயங்கிப் போனவர்களில் மூத்த எழுத்தாளர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர் என்ன சொன்னார் தெரியுமா? "அவரது சொற்பொழிவை நான் கேட்டிருக்கிறேன். சொற்பொழிவு என்றால் இதுவல்லவா சொற்பொழிவு? தட்டுத் தடுமாறி சொற்களுக்குத் திண்டாடி நிற்பதையெல்லாம் சொற்பொழிவு என்கிறோம் என்று சொல்கிறோமே எனச் சொல்லத் தோன்றும்.
இரண்டு வாரத்துக்கு முன் திருச்சிராப்பள்ளியில் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்தேன். "இதோ ஒரு பெர்னாட் ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார்" என்றார் கல்கி.

அதையே 'தென்னாட்டு பெர்னாட் ஷா' எனக் கழகத்தினர் அடைமொழி போட்டு அழைக்கத் தொடங்கினர். அண்ணாதுரையை ராஜாஜி ஆதரித்தார். ராஜாஜியின் விசுவாசி கல்கி. எனவே அவருக்கு அண்ணா மீது பாசம். 1954 வரை உயிருடன் இருந்த கல்கி திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் இந்தப் பூவுலகில் இல்லை. அவரால் திமுக ஆட்சியைப் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாமலே போனது.

அமெரிக்காவின் ஹவாய் பலகலைக் கழகத்தில் உள்ள 'ஈஸ்ட் வெஸ்ட் செண்டர்' அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் மாணவர்களிடையே அண்ணாதுரை உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் நடந்த 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது என்றும் 1967இல் தான் அது குறைந்தது என்றும் கூறினார்.

இந்தக் குறைபாடுகள் இருந்தாலும் உலகத்திலேயே ஜனநாயகத்தை முறையாகக் கையாளும் நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. ராணுவ ஆட்சிக்கு வழி கொடுக்காமல் மக்களாட்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது எனக் கூறியவர் பிறநாடுகளை ஒப்பிட்டுக் காட்டினார்.

மும்மொழிக் கொள்கை வேண்டுமா?

அமெரிக்காவில் அவர் அளித்த நேர்காணலில் மும்மொழி கொள்கை பற்றிய விளக்கினார். "காங்கிரஸ் ஆட்சியில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்தது. அன்று எதிர்க்கட்சி அணியிலிருந்த நான் அதை எதிர்த்தேன். மீறி நடைமுறைக்கு வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்கள் வரை அது நடைமுறையிலிருந்தது.ஆனால், பிற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை ஒப்புக்கும் இருக்கவில்லை. இதனிடையே தான் இந்தியை ஏற்காத மாநிலங்கள் ஏற்கும் வரை ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக இருக்கலாம் என மசோதா நிறைவேறியது. ஆகவே இருமொழிக் கொள்கைக்கு மாறினோம்" என்றார்.

"இந்த இருமொழிக் கொள்கை மாற்ற வேண்டி மக்கள் விரும்பினால் ஆட்சியையும் மக்களே மாற்றுவார்கள். இன்னும் புரட்சி வேண்டும் என்று எண்ணினால் ஒரே மொழியாகவும் மாற்றலாம். ஆனால், நான் ஆட்சியில் இருக்கும்வரையில், இருமொழித் திட்டத்தை மாற்றுவதாக இல்லை" என இறுதி முடிவாகத் தெரிவித்தார் அண்ணா.

திமுக ஒரு மாநிலக் கட்சியாகவே இருக்கிறது. அது இந்திய அளவில் வளரும் கட்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேசிய கட்சியாக வருங்காலத்தில் மாற்றம் பெறுமா? என்ற கேள்வியை எதிர்கொண்ட அண்ணா, "திமுக 149இல் ஆரம்பமானது. பல ஆண்டுகள் தேர்தலுக்கு நிற்கவில்லை. 57இல் முதன்முதலாகப் போட்டியிட்டோம். சட்டமன்றத்தில் 15 இடங்களில் வென்றோம். நாடாளுமன்றத்தில் 2 தொகுதிகளைப் பிடித்தோம். அப்போது எதிர்த் தரப்பு கட்சியாக இருந்தோம். அடுத்த தேர்தலில் சட்டசபையில் 50 இடங்கள், நாடாளுமன்றத்தில் 8 இடங்களையும் மக்கள் அளித்தனர். 1967இல் சட்டமன்றத்தில்134 இடங்களையும் நாடாளுமன்றத்தில் 25 இடங்களையும் தந்தார்கள். இன்று எங்களின் அடித்தளம் நன்றாக உள்ளது. ஒரே இரவுக்குள் கட்சி உருவாகுமானால் அதற்கு எதிர்காலமே இருக்காது" என்றார் அண்ணா.

நீதிமன்றத்தில் அண்ணாதுரை

அண்ணா ஆட்சிக்கு வந்தபோது அவரது கட்சி பழைய கொள்கைகளைக் கைவிட ஆரம்பித்துவிட்டது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக நிலவியது. கட்சி வளர்கிறதா? கொள்கை தேய்கிறதா? இது பற்றி அண்ணாவே விளக்கினார். "நாங்கள் பிரிவினை பேசிய காலத்தில் 50 இடங்களை மட்டுமே தந்தார்கள். அந்தக் கொள்கையை விட்ட பிறகு 154 இடங்களைத் தந்தார்கள். இதை எண்ணிப் பார்க்கையில் மக்கள் என் மீது கோபம்" கொண்டதைப்போல் தெரியவில்லை" என்றார்.

திமுகவின் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் பிரச்சனை அமெரிக்கா சென்றபோதும் ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டது. அதற்கு அண்ணாதுரை, "சென்னையில் பிராமணர் அல்லாதோர் பிரச்சனை ஒழிந்துவிட்டது. ஆனால், திராவிடர் கழகம் சில சமூக மறுமலர்ச்சிக்கான முயற்சியை இன்னும் மேற்கொண்டு வருகிறது.

நான் ஒருமுறை புத்தகம் எழுதினேன். இந்துமத தத்துவங்களில் சில இன்றைக்கு ஒத்துவராத கருத்துகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தினேன். அதற்காக 153 பிரிவின் படி வழக்குப் போட்டார்கள். 153 என்பது ஒரு வகுப்பினர் மீது வெறுப்பை விதைப்பதாகும்.

என்னை நீதிமன்றத்திற்கு அழைத்து தண்டம் விதித்து சிறைக்கு அனுப்பினார்கள். நான் மேல்முறையீடு செய்தேன். அது மூன்று நீதிபதிகள் அமர்ந்திருந்த பெஞ்ச். நீதிபதியாக ராஜ மன்னார் இருந்தார். சந்திரா ரெட்டி, பதஞ்சலி சாஸ்திரி இருந்தனர். 'அண்ணாதுரை ஒரு ஏற்பாட்டைத் தெரிவிக்கும்போது இப்போதுள்ள பிராமணர்கள் எரிச்சல் பட வேண்டியதில்லை' என்று தீர்ப்புக் கூறிவிட்டனர். ஆகவே, சமுதாய முன்னேற்றத்திற்காக நடத்தப்படும் பிரச்சாரத்திற்காக இப்போதுள்ள பிராமண இளைஞர்கள் வருந்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார் அண்ணா.

- எழுதியவர் கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+