இப்படி பண்ணிட்டு.. கணவரிடம் பின் அலிமோனி கேட்க முடியாது.. நீதிமன்றத்தை உலுக்கிய விவாகரத்து கேஸ்!
சென்னை: மனைவி அல்லது அவரது குடும்பத்தினரால் கணவருக்கு வருமான இழப்பு ஏற்பட்டால், விவாகரத்தின் போது மனைவி பராமரிப்புத் தொகை கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கணவர் வருமானம் ஈட்டும் திறனை இழக்க மனைவியின் செயல்களோ அல்லது தூண்டுதல்களோ காரணமாக இருந்தால், அவரிடமிருந்து மனைவி பராமரிப்புத் தொகை (Maintenance) கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவி தொடுத்த வழக்கு
விவாகரத்திற்கு பின் தனக்கு பராமரிப்பு தொகை வழங்க கோரி தனது கணவர் மீது ஒரு பெண் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தப் பெண்ணின் கணவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். அவரது கிளினிக்கில் நடந்த ஒரு மோதலின் போது, அவரது மைத்துனர் மற்றும் மாமனார் ஆகியோரால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குஷிநகர் குடும்ப நீதிமன்றம் ஏற்கனவே மனைவியின் பராமரிப்புத் தொகை கோரிக்கையை நிராகரித்திருந்தது. அந்த முடிவை உறுதி செய்த நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா, "மனைவியின் குடும்பத்தினர் செய்த குற்றச் செயலால் ஒரு மனிதனின் வருமான ஈட்டும் சூழல் அழிக்கப்பட்ட நிலையில், அத்தகைய சூழ்நிலையில் பராமரிப்புத் தொகை வழங்குவது கடுமையான அநீதிக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டார்.
வழக்கின் பின்னணி
வேத் பிரகாஷ் சிங் என்ற அந்த மருத்துவர், தனது கிளினிக்கில் வைத்து மனைவியின் சகோதரர் மற்றும் தந்தையால் சுடப்பட்டார். இதனால் அவர் வருமானம் ஈட்டவோ அல்லது மனைவிக்கு பராமரிப்புத் தொகை வழங்கவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கணவரின் முதுகுத்தண்டில் இன்னும் ஒரு குண்டு (Pellet) தங்கியிருப்பதை உயர் நீதிமன்றம் கவனித்தது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், அவரால் நிம்மதியாக அமரவோ அல்லது வேலைக்குச் செல்லவோ முடியாத நிலை உள்ளது.
பக்கவாதம் ஏற்படும் அபாயம் - கடுமையாக கண்டித்த நீதிமன்றம்
உடல் நலக்குறைவு: மே 7, 2025 அன்று குடும்ப நீதிமன்றம் இடைக்கால பராமரிப்புத் தொகை கோரிக்கையை நிராகரித்தது. கணவரின் உடல் தகுதியின்மை மறுக்க முடியாதது மற்றும் அது மனைவியின் குடும்பத்தினரால் நேரடியாக ஏற்படுத்தப்பட்டது என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
சமூக எதிர்பார்ப்பும் சட்டமும்: "இந்திய சமூகம் பொதுவாக ஒரு கணவன் உழைத்துத் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் இந்த வழக்கு தனித்துவமானது," என்று நீதிபதி சுக்லா கூறினார். இந்த வழக்கு தனித்துவமானது.. அதனால் இதை மற்ற வழக்குகளின் அடிப்படியில் அணுக முடியாது. இங்கே பாதிக்கப்பட்டவர் கணவர்தான்.
நீதிமன்றத்தின் கருத்து: "தன் கணவரின் வருமான ஈட்டும் திறனைப் பாதிக்கும் செயல்களில் ஒரு மனைவி ஈடுபட்டால், அந்தச் சூழ்நிலையைப் சாதகமாகப் பயன்படுத்தி அவர் பராமரிப்புத் தொகை கோர அனுமதிக்க முடியாது. அவ்வாறு பராமரிப்புத் தொகை வழங்குவது கணவனுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படும் உண்மைகளைத் தவிர்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்ள முடியாது," என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு, கணவனின் கடமைகளைப் போலவே, மனைவியின் நடத்தையையும் பராமரிப்புத் தொகை கோரும் வழக்குகளில் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications