மீண்டும் மினி லாக்டவுன்? மடமடவென உயரும் கொரோனா.. வந்து விழுந்த கேள்வி! நறுக்கென பதில் சொன்ன மா.சு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனிடையே மீண்டும் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வருமா என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்
இந்தியாவில் கடந்த சில காலமாகக் குறைந்து வந்த கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது நாட்டில் பரவும் புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய சூழலில் கேரளாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட நேற்றைய தினம் தினசரி பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

அமைச்சர் மா சுப்பிரமணியன்: இதனிடையே நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இப்போது கேரளாவில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
கொரோனா அதிகரிக்கும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களுக்குச் சோதனைகளைத் தொடங்கியுள்ளோம். இப்போது வெளிநாடுகளுக்கு வரும் பயணிகளில் 2% பேரை ரேண்டம் முறையில் பரிசோதனை செய்கிறோம். தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கொரோனா டெஸ்டிங்கை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
எங்கே அதிகம்: கோவையைப் பொறுத்தவரை வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இங்கே ஈஎஸ்ஐ 1000 படுக்கைகளும் அரசு மருத்துவமனையில் 100+ படுக்கைகளும் ரெடியாக இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 PSA பிளான்ட்டுகளும், 2,067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் கைவசம் இருக்கிறது. அனைத்தும் 100% தயார் நிலையில் இருக்கிறது.
இப்போது மாநிலத்தில் தினசரி 4000 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்டிங் செய்து வருகிறோம். மேலும், காய்ச்சல், சளி போன்ற அறிகுறியுடன் மருத்துவமனைகளில் வருபவர்களை டெஸ்ட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம். இப்போது கொரோனா டெஸ்டிங் 4000ஆக இருக்கும் நிலையில், விரைவில் அதைத் தினசரி 11 ஆயிரம் டெஸ்டிங் என்ற அளவிற்கு உயர்த்த இருக்கிறோம். இப்போது ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இணை நோய்: குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும்... தமிழ்நாட்டைக் காட்டிலும் கேரளாவில் வைரஸ் பாதிப்பு 10 மடங்கு அதிகமாகவே இருக்கிறது. ஏற்கனவே நமது மாநிலத்தில் மருத்துவமனைகளில் மாஸ்க்குகளை கட்டாயமாக்கியுள்ளோம். சளி , காய்ச்சல் அறிகுறி இருந்தால் வெளியே செல்ல வேண்டாம். தனிமைப்படுத்துக் கொள்வதே அவசியம்.
லாக்டவுன்: இப்போது எந்தவொரு இடத்திலும் க்ளஸ்டரான (ஒரே இடத்தில் அதிகப்படியான கொரோனா) பாதிப்புகள் இல்லை. தனி நபர் பாதிப்பே அதிகமாக இருக்கிறது. கொரோனா ஹாட்ஸ்பாட்கள் எதுவும் இல்லை" என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் கொரோனா அதிகரிக்கும் நிலையில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வருமா என்று கேட்ட கேள்விக்கு அமைச்சர், "அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை" என்று பதிலளித்தார்.
இன்புளுயன்சா அதிகரித்த போது அதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தோம். தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுக்க சிறப்புக் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. 52,568 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அதன் மூலம் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பின்பு தமிழகம் முழுக்க முதலமைச்சர் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைத் திறந்து வைப்பார்" என்று தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications