நேரடியாக பேசிய எடப்பாடி.. ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்த்துப்பீங்களா? செய்தியாளர் கேள்விக்கு பரபர பதில்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர்
சென்னை: அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு இன்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்தார்.
ஒருவழியாக.. கன்னித்தீவு கதை முடிவிற்கு வந்துள்ளது. இது உண்மையான கன்னித்தீவு கதை அல்ல. அதிமுகவில் நடந்து வந்த கன்னித்தீவு கதை.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.

தீர்ப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அற்புதமான தீர்ப்பு
இந்த நிலையில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில், உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீதி, நேர்மை, தர்மம் வென்றுள்ளது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, என்று கூறினார். இதையடுத்து எடப்பாடியிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவர்.. இந்த தீர்ப்பை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.. அவரை கட்சியில் சேர்த்துக்கொள்வீர்களா என்று கேட்டார். அதில் பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, அவருக்கு என்ன சொல்ல வேண்டும். அவரிடம் என்ன சொல்ல இருக்கிறது.

தீர்ப்பு உள்ளது
தீர்ப்பு வந்துவிட்டது. கட்சியில் வழக்கு முடிந்துவிட்டது. அதோடு அவரின் "இதுவும்" முடிந்துவிட்டது. இனி அவருக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வெற்றி என்னுடைய வெற்றி இல்லை. அது அதிமுகவின் வெற்றி. அதிமுக தொண்டர்களின் வெற்றி. இனி பொதுச்செயலர் தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்போம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து முடிவு எடுப்போம். அவர்கள் சிவில் கோர்ட் போனால் போகட்டும். உச்ச நீதிமன்றம் பெரிய நீதிமன்றம். அதில் நாங்கள் வென்றுவிட்டோம்.

தொண்டர்கள்
ஒன்றரை கோடி தொண்டர்கள் வென்றுவிட்டனர். நாங்கள் வென்றுவிட்டோம். இனி எங்களுக்கு பிரச்சனை இல்லை. அதிமுகவிற்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருக்கிறோம். கட்சிகள் உழைத்தவர்களை அழைத்து உள்ளோம். ஒரு சிலரை தவிர வரவேற்போம். ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அந்த ஒரு சிலரை நாங்கள் ஏற்கலாம். "அவர்"தான் கட்சியில் இல்லை என்று ஆகிவிட்டதே. உச்ச நீதிமன்றமே அவரை நீக்கியது சரி என்று ஆகிவிட்டதே. இனி என்ன சேர்த்துக்கொள்வது, என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications