கைதாகும் சீமான்? நடிகை பலாத்கார வழக்கில் தொடங்கிய விசாரணை.. அவரது வழக்கறிஞர் சங்கர் முக்கிய தகவல்
சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் சீமானிடம் போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சீமான் இன்று கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது தரப்பு வழக்கறிஞர் சங்கர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த நடிகை இந்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டார்.

போலீஸ் விசாரணை
இருப்பினும், இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட், "பாலியல் புகார் என்பதால் இது தீவிரமானது. சம்பந்தப்பட்ட நடிகை புகாரை வாபஸ் பெற்றாலும் கூட போலீசாருக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறது. இது குறித்த விசாரணையை 12 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.
அதன்படி போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் சீமானை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நேற்று சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி இப்போது சீமான் நேரில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்கிடையே விசாரணையின் முடிவில் சீமான் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
சீமான் தரப்பு வழக்கறிஞர்
இதற்கிடையே புதிய தலைமுறை டிவி சேனலுக்கு பேட்டி அளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர் சங்கர், சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். சீமான் வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர் மேலும் கூறுகையில், "இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றே போலீசார் நேற்று சம்மன் அளித்தனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் வகையிலேயே சீமான் இப்போது ஆஜராகிறார். இந்த வழக்கு 2011ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு. ஆனால், புகார்தாரர் 2012ல் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார்.
அதன் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து, 2023ல் மீண்டும் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாகச் சீமான் இதே காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்தார்.
சீமான் கைதாக வாய்ப்பு?
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில் விசாரணையை முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணைக்காகவே சீமான் போலீஸ் நிலையம் வருகிறார். இதில் புதிதாக எதுவும் நடக்கப் போவது இல்லை. இதில் சீமான் தரப்பு விளக்கத்தை போலீசார் பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் நாங்கள் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் தருவோம்.
இந்த விசாரணையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். ஆனால், இதுபோன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் பல முறை தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அதாவது இருவர் முழு சம்மதத்துடன் இருந்தால் அது குற்றமாகாது என்பதை உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளன. எனவே, அதை வைத்துப் பார்க்கும் போது தீவிர நடவடிக்கை எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
சீமானுக்கு அந்த நடிகையை தெரியுமா?
புகார்தாரரைத் தெரியாது என்றோ அவரை பார்த்ததே இல்லை என்றோ சீமான் ஒரு காலத்திலும் சொன்னது இல்லை. ஏனென்றால் சீமான் இயக்கத்திலேயே அவர் நடித்துள்ளார். எனவே, அவரை தெரியாது எனச் சீமான் ஒரு போதும் சொல்லியது இல்லை. ஆனால், அவர் அளித்த புகாரில் சொல்லப்பட்ட விஷயங்கள் புகார்கள் ஆகியவை அவர் சொல்லிய விதத்தில் எதுவும் நடக்கவில்லை.. அனைத்துமே பொய் என்பதே எங்கள் வாதம்" என்றார்.












Click it and Unblock the Notifications