இப்ப கூட இவங்க ஒன்னு சேர மாட்டாங்களா.. நெருக்கடியான நேரத்தில்கூட சண்டையா.. விரக்தியில் மக்கள்!
கொரோனா அரசியல் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்
சென்னை: இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில்கூட சண்டை போட்டு கொள்ள வேண்டுமா.. அவதூறுகளை பரப்பி கொள்ள வேண்டுமா? விமர்சனங்களை தந்து பதிலடிகளை நிறைவேற்றி கொள்ள வேண்டுமா? தமிழக அரசியல் கட்சிகள் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தானே கொரோனாவை விரட்ட வழி ஏதாவது கிடைக்கும் என்பதே பல தரப்பு மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது!
Recommended Video
வைரஸ் இந்தியாவுக்குள் நுழையாது என்ற நம்பிக் கொண்டிருந்தோம்.. மீறி புகுந்து 11 பேரை காவு வாங்கி கொண்டது.. லட்சக்கணக்கானோர் கண்காணிப்பில் உள்ளனர்.. தொற்று உள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்!
இன்னும் இந்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் உறைந்து கிடக்கின்றன.. தமிழகத்தில் இந்த பலி எண்ணிக்கை அதிகமாகி விடக்கூடாது என்பதில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.. அரசு எடுத்து வரும் முயற்சியில் எந்த குறையும் சொல்லிவிட முடியாது.

வேதனை
ஆனால் அதே சமயம், இரு பெரும் கட்சிகள் மாறி மாறி குறை சொல்ல தொடங்கி உள்ளது வேதனையை அளித்து வருகிறது.. எதையும் அரசியல் ஆக்க மாட்டோம், எதையும் அரசியலாக்க விரும்பவில்லை என்று சொல்லி கொண்டே, மாற்று கட்சிகளுக்கு வழக்கமான பதிலடிகளை தந்து வருகின்றனர். காலங்காலமாக பதிலடி, விமர்சனங்களை செய்தே பழக்கப்பட்ட தமிக கட்சிகளுக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழலிலும் அமைதியையும், விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் போதுமானதாக இல்லை என்றே தெரிகிறது!

மூத்த தலைவர்கள்
வைரஸ் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டிவிட்டது என்றதுமே, இதற்கு திமுதான் காரணம் என்கிறது அந்த தரப்பு.. அரசாங்கம் முறையாக செயல்பட தவறினால், திமுக செயல்பட வைக்கும் என்கிறது இந்த பக்கம் உள்ள தரப்பு!! இதற்கு நடுவில் "துண்டு சீட்டு இல்லாமல் படிக்க முடியாது" என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.. "துண்டு போட்டு பதவியை பிடிப்பதில் நிபுணர் அமைச்சர் ஜெயக்குமார்" என்கிறார் மூத்த தலைவர் துரைமுருகன்.

விமர்சனங்கள்
இப்படி ஒரு எதிர்வாதங்கள் இந்த நேரத்தில் தேவையா என்பதுதான் மக்களின் கேள்வி.. அரசியலாக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு மூத்த அமைச்சர்களே இப்படிப்பட்ட விமர்சனங்களை செய்து வருவது இந்த நேரத்தில் சரி கிடையாது என்பதே அனைவரின் கருத்தும்.. ஒரு கட்டத்தில் தனிமனித விமர்சனமும் இதில் நடக்க ஆரம்பித்துவிட்டது.

வார்த்தைகள்
"முதலமைச்சர் ஆத்திரத்துடன் பதில் சொல்கிறார்.. அவரது அண்மைக்கால ஆத்திர குணம் அப்படி.. பொங்கி வழிகிறார்" என்ற வார்த்தை தாக்குதல்களும் எல்லை மீற கொண்டிருக்கின்றன. இப்போதுள்ள மாநில யதார்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளது.. ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்டனர்.. ஆனால் நம்மால் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. 4 லட்சம் கிட் எங்கே என்று கேட்டால் "உங்களுக்கே தெரியும்" என்று செய்தியாளர்களிடமே திருப்பி விடும் அதிகாரிகள் உள்ளனர்.

அழுத்தங்கள்
முதல்கட்ட நிதியே போதவில்லை என்று சொன்ன நிலையில், அடுத்தடுத்த நிதி அறிவிப்புகளும் நமக்கு இன்னும் வந்து சேரவில்லை.. மத்திய அரசுக்கு மாநில அரசு போதுமான அழுத்தங்களை தர தவறிவிட்டதா என்ற சந்தேகம் பொதுவாகவே எழுந்துள்ளது!! இந்த மிகப் பெரும் நெருக்கடியான சமயத்திலும் கூட கட்சிகள் பிரிந்து தேவையில்லாத சண்டைகளில் ஈடுபட்டுள்ளன.. மக்களில் ஒரு தரப்பு பசியில் செத்துக் கொண்டிருக்கிறது... அவர்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை... யாராவது எதையாவது தருவார்களா என்று கையேந்தி கொண்டுள்ளனர்.. ஆனால் அவர்களுக்கு அளிக்கும் ஈகைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விட்டது.

கட்சிக்காரர்கள்
கூலி தொழிலாளர்கள், விவசாயிகளைவிட பிச்சைக்காரர்கள், சாலையோரங்களில் குடியிருப்போரின் நிலை அதைவிட மோசமாக உள்ளது.. இப்படிப்பட்ட அவல நேரத்தில்தான் அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து பாரபட்சமே இல்லாமல் மக்களுக்காக ஒருமித்து களம் இறங்க வேண்டும். இதற்கு காரணம் இந்த மக்களை நம்பித்தான் பாகுபாடின்றி எல்லா கட்சிக்காரர்களும் உள்ளனர்.

அதிருப்தி
அப்படி இருக்கும்போது மக்களைக் காக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒரே அணியில் நிற்க வேண்டுமே தவிர ஆளாளுக்கு நாட்டாமை செய்ய நினைக்கக் கூடாது. அப்படி செய்தால் எதிர்காலத்தில் அத்தனை பேரையும் மக்கள் தூக்கி எறியும் நிலை ஏற்படும்.. நம் மக்கள் ஏற்கனவே கொதித்து போய் உள்ளனர்.. அதிருப்தியில் உள்ளனர்.. அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்ப மனநிலையில் உள்ளனர்.. அதனால் யார் மீது வேண்டுமானாலும் கோபத்தை கக்க தயாராகவும் உள்ளனர்.. இந்த சூழலில் அனைத்து தமிழக தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்.

கேரளா
கேரளாவில் ஜனவரி மாதமே நிலைமையை புரிந்து கொண்டனர்.. மாநில அளவில் 2வது இடத்தில் இருந்து இன்றைக்கு எங்கோ வரிசையில் பிந்தி தங்கி போய் கொண்டிருக்கிறது.. 2 வருடத்திற்கு முன்பு "கேரளா சோமாலியா போல் ஆகிவிட்டதாக" பிரதமர் மோடி பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி இருந்தார்.. ஆனால் இன்றைக்கு அந்த மாநிலம்தான் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.. இதற்கு காரணம் அவர்களின் ஒற்றுமை கூட்டு முயற்சிதான்.

கர்நாடகா - கேரளா
தங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், குறைகளை ஒருவர் மீது ஒருவர் சொல்லி கொண்டாலும் கர்நாடகாவில் எல்லா கட்சி தலைவர்களும் ஒரு பிரச்சனை என்றால் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்.. இந்த தன்மை நம்மிடம் இல்லை.. அதற்கு நேற்றைய தமிழக தலைவர்களின் அறிக்கைகளும், குற்றச்சாட்டுகளுமே சாட்சி.. இது மாற வேண்டும்.. "கொரோனா அரசியல்" துடைத்தெறியப்பட வேண்டும்.. விழிபிதுங்கி கலங்கி தவிக்கும் தமிழக மக்களுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைவரின் எதிர்பார்ப்பாகும்!!












Click it and Unblock the Notifications