தலையே சுத்துது.. அலறவிட்ட எடப்பாடி.. அல்லாடும் பாஜக.. ஆட்டத்தை கலைத்து வெளியேறும் 3 பேர் + 3வது அணி?
சென்னை: "கூட்டணி முறிந்தது முறிந்ததுதான், கதம் - கதம்.. இனி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்று எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், பாஜகவில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. அதேசமயம், 3வது அணி உருவாகும் சூழலும் தமிழகத்தில் வலுவாக கிளம்பி உள்ளதாக தெரிகிறது.
இதுவரை நடந்த தேர்தல்களில், பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கு எப்போதுமே அதிகம் என்பதைபோலவே, சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு பெருத்த பலமாக இருந்து வருகிறது.

சிறுபான்மை வாக்குகள்: இந்த சிறுபான்மையினர் வாக்குகளை கடந்த வருடங்களில் அதிமுக இன்னும் அதிகமாகவே இழந்தும் வருகிறது.. இதற்கு காரணம் பாஜகதான் என்பதை, அதிமுக தலைவர்களே வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.
அந்தவகையில், பாஜக கூட்டணியிலிருந்து இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை தருவதுடன், பாஜக எதிர்ப்பு வலுவாக உள்ள தமிழகத்தில், அந்த வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது அதிமுக இந்த முறை பெற்றுவிடும் என்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காகவே, திமுக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக முயற்சிப்பதாக தெரிகிறது.
சந்தேகம்: அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது மிகப்பெரிய சந்தேகமாகவும், குழப்பமாகவும் உள்ளது.. இந்த 3 பேருமே பாஜகவுக்கான ஆதரவை தந்துவருபவர்கள் என்றாலும், வெளிப்படையாக இவர்களை கூட்டணிக்குள் பாஜக கொண்டுவருமா என்று தெரியவில்லை. ஒருவேளை, இவர்கள் 3 பேருமே பாஜகவுடன் இணைந்தால், அதிமுகவுடன் எந்த காலத்திலும் பாஜக இணைய வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
அல்லது, எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து, பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், இந்த 3 பேருமே, 3வதாக இன்னொரு அணியை அமைக்கவும் தயாராகவே இருப்பதாக தெரிகிறது. "தனித்து போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து சொல்லி வருவதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு தென்மண்டலம் தவிர, வடக்கு மாவட்டங்களில், பெரிய ஆதரவு இருப்பதாக தெரியவில்லை.. அதேபோல, டிடிவி தினகரனுக்கும், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்குகள் இருப்பதாக தெரியவில்லை. எனவே, எவ்வளவுதான், எடப்பாடி மீதான வெறுப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்தாலும், அவைகள் எல்லாம் வாக்குகளாக இவர்களுக்கு மாறுமா? என்பது சந்தேகம்தான்.
நிலைப்பாடுகள்: இவர்கள் இருவரும் இப்படியென்றால், சசிகலாவுக்கான நிஜசெல்வாக்கு இதுவரை என்னவென்றே தெரியவில்லை.. அதிரடி அரசியலுக்குள் வராமல், ஒதுங்கியே அரசியல் செய்துவருவதால், சசிகலாவின் நிலைப்பாடு குறித்தும் உறுதியாக தெரியவில்லை.
இதில், தினகரனை பொறுத்தவரை, "தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்" என்கிறார்.. ஒவ்வொருமுறையும், தேசிய கட்சியுடன் கூட்டணி என்கிறாரே தவிர, அது எந்த தேசிய கட்சி என்று தினகரன் இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.. எனவே, பாஜக இல்லாவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவும் தினகரன் ரெடியாகி இருப்பதாகவே தெரிகிறது.
காங்கிரசுடன் தினகரன் இணையும்பட்சத்தில், ஓபிஎஸ், சசிகலா இணைவார்களா? என்பது சந்தேகம்தான்.. ஆனால், அதிமுக இல்லாத அணியை பாஜக உருவாக்குமானால், அந்த கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது..
திமுக வாக்குவங்கி: அதுமட்டுமல்லாமல், பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளும் இந்த அணியை நோக்கி வரக்கூடும்.. அப்படியானால், உருவாகும் 3வது அணி, ஒரு வலுவான கூட்டணியாக இருப்பதுடன், அதிமுக, திமுகவின் வாக்கு வங்கிகளை உடைக்கக்கூடிய கூட்டணியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என 3 பேருக்குமே ஓரளவு நிமிர வாய்ப்பு உள்ளது.. மாறாக, பாஜக அல்லாத கூட்டணி அமைந்துவிட்டால், இந்த 3 பேருக்குமே நிலைமை சிக்கல்தான்.. அந்தவகையில், இவர்கள் மூவரையும் இணைத்து பாஜக தனி கூட்டணி அமைக்குமா? அல்லது எடப்பாடியை சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணியை பாஜக அமைக்குமா? தெரியவில்லை..
க்ளைமேக்ஸ்: அதைவிட முக்கியமாக, மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதாவையும் அண்ணாவையும் விமர்சித்த பாஜகவுடன், தினகரனும், ஓபிஎஸ்ஸும், சசிகலாவும் இணைய முற்படுவார்களா? அப்படியே இணைந்தாலும் அதிமுக விசுவாசிகள் இந்த கூட்டணியை ஏற்பார்களா? அப்படியே கூட்டணியை ஏற்றாலும், இதை வைத்தே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை கையில்எடுத்துவிடுவாரோ? என்றெல்லாம் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications