மகாமகம், கரூர் போல.. அப்பாவி மக்களை பலிகொண்ட.. நாடு முழுவதும் நடந்த மோசமான நெரிசல் சம்பவங்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அவரை காண அதிக அளவில் மக்கள் கூடியதால், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல இதற்கு முன்னர் கும்பகோணம் மகாமகம் விழாவிலும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இது தவிர நாடு முழுவதும் வேறு சில மோசமான நெரிசல் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
கடந்த 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி கும்பகோணம் மகாமகம் திருவிழாவில், புனித நீராடலுக்காக திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்தனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருகை தந்ததும், மக்களின் கூட்டம் மேலும் அதிகரித்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

இந்த சம்பவங்கள் போல கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த சில முக்கிய கூட்ட நெரிசல்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன
உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் நகரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மதக் கூட்டத்தில் சுமார் 121 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், சங்கமம் பகுதியில் அமிர்த நீராடலுக்காக பக்தர்கள் திரண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் கடந்த 2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த நெரிசல் சம்பவங்களில் மிகவும் கவனிக்கப்பட்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்தான். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு அலகாபாத் கும்பமேளாவின்போது, ரயில் நிலையத்தில் ரயிலைப் பிடிக்க முயன்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிலச்சரிவு குறித்த வதந்திகள் பரவியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 145 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள சாமுண்டேஸ்வரி தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 168 பேர் பலியாயினர்.
மகாராஷ்டிராவில் உள்ள மன்ஹார்தேவி கோவிலில் கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 265-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதற்கெல்லாம் முன்னதாக கடந்த 1954-ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் இந்திய வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் சுமார் 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications