கரூரில் ராகுல்காந்தி- விஜய் சந்திப்பு? இதுவும் ஸ்டாலினுக்கு தெரியுமா? தவெகவுடன் செல்கிறதா காங்கிரஸ்?
சென்னை: அடுத்த மாதம் 5 ஆம் தேதி வாக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தவெக தலைவர் விஜய்யும் சந்திப்பு நடத்த போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கரூர் விவகாரத்தில் ஏற்கெனவே தொலைபேசியில் பேசியது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்படும் நிலை உள்ளது.
கட்சிகள் வேறு, கொள்கைகள் வேறு இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பல்வேறு கட்சி தலைவர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலும் அரசியல் நாகரீகம் கருதி ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி வருகிறார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் அப்படிப்பட்டவர்தான். நாடாளுமன்றத்தில் ஒருமுறை பிரதமர் மோடியையே கட்டி பிடித்தவர்தான். அது போல் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய கமல்ஹாசனை டெல்லி வரவழைத்து அங்கு அரசியல் விவகாரங்களை இருவரும் பேசியதாக தெரிகிறது.
ஸ்டாலினுடன் நட்பு
அது போல் தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் ராகுல் காந்திக்கு நல்ல நட்புள்ளது. கூட்டணி தலைவர் என்பதையும் தாண்டி, அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி- காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இடையே தந்தை- மகள் உறவு இருந்ததை போல் அவர்களது வாரிசுகளான இவர்கள் இருவரும் சகோதரர்கள் போல் பழகி வருகிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு
இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தால் விஜய் அங்கிருந்து சென்னை வந்து வீட்டை விட்டு வெளியே வராமல் மிகுந்த வலியில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் முதல் ஆளாக போன் போட்டு அவருக்கு ஆறுதல் கூறியது ராகுல்காந்திதான்.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பு
இது திமுக கூட்டணிக்குள் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வரிடமும் ராகுல் காந்தி பேசியிருந்தாராம். அப்போது விஜய் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என முதல்வரிடம் ராகுல் வேண்டுகோள் விடுத்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.
செல்வப்பெருந்தகை சொன்னது என்ன
இதுகுறித்து செல்வப்பெருந்தகை கூறிய போது, "ராகுல் காந்தி விஜய்யுடன் எந்த அரசியலும் பேசவில்லை. இப்படியான துயரச் சம்பவத்தின் போது ராகுல் காந்தி கட்சி, மாநிலம் பார்ப்பதே கிடையாது. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு தான் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசினார்.
விஜய் மீது நடவடிக்கை
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலினிடம் ராகுல் கேட்டுக் கொண்டதாக சொல்வதெல்லாம் தவறான கருத்து. பாஜக ஆளும் முதல்வர்களிடம் கூட ராகுல் காந்தி விசாரிக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இந்த நிகழ்வை ராகுல் காந்தி பார்க்கிறார். விஜய்யிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
புதிய தகவல்
எனவே அனைவரும் கரூர் சம்பவம்தான் என்று கடந்து போனார்கள். ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் ராகுல் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும், வரும் நவம்பர் 5ஆம் தேதி கரூர் வந்து அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்கிறாராம்.
ராகுல்- விஜய் மீட்டிங்
இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலோ அல்லது ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலோ விஜய்யை ராகுல் காந்தி சந்திக்கிறாராம். இது தற்போது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு காங்கிரஸ் போட்டி
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது: "ஒன்று விஜய்யை பாஜக தங்கள் கூட்டணிக்கு வரவழைத்துவிட கூடாது என்பதால் ராகுலும் போட்டி போட்டுக் கொண்டு விஜய்யுடன் பேசுகிறாராம். இதன் மூலம் பாஜக திட்டத்தை தவிடுபொடியாக்கும் முயற்சியாம்.
விஜய்+ ராகுல் கூட்டணியா
அப்படி என்றால் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்று நினைக்காதீர்கள். விஜய் தனது ஒவ்வொரு மாநாடு , பிரச்சாரத்தில் திமுகவை விமர்சித்தே பேசி வருகிறார். திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஓய்வு கொடுக்க வேண்டும் என சொல்லி வருகிறார். அப்படியிருக்கும் போது அவர் எப்படி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுடன் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு இணைந்தால் கமல்ஹாசனை போல் விஜய்யும் ஆகிவிடுவார்.
சீட் பேரம்
இன்னொன்று எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இது போன்று யாருடனாவது பேச்சுவார்த்தையை நடத்தி தங்களது சீட் பேரத்தை உயர்த்தும் முயற்சி. கடந்த தேர்தலில் கமல்ஹாசனுடன் பேசி சீட் பேரத்தை உயர்த்தியதாக சொல்லப்படுகிறது.
தொகுதி பங்கீடு
அந்த வகையில் இந்த முறை விஜய்யுடன் பேசுவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி திமுக கூட்டணியில் தங்களுக்கான சீட் பேரத்தை அதிகரிக்கவே இது போல் ஒரு முயற்சி நடப்பதாகவும் இதை வைத்து தங்களது தொகுதி பங்கீட்டை அதிகப்படுத்தவும் செய்வார்களாம். ஆனால் ஒரு போதும் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்காது. திமுகவை விட்டு காங்கிரஸ் பிரிந்து செல்லாது" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications