யோகி போட்ட உத்தரவு? கடைகளை மூடும் முதலாளிகள்? கவலை அளிக்கும் கன்வார் யாத்ரா
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் உத்தரப் பிரதேச அரசியல் உலகில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. யோகி தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவர். மவுரியா ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர். தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று உட்கட்சிக்குள் போர்க் கொடியை உயர்த்தி பிடித்திருக்கிறார் மவுரியா. அதற்கு பாஜக கூட்டணியில் அப்னா தள் ஆதரவு கொடுத்துள்ளதால் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் விவகாரம் வளர்ந்துள்ளது.
அதனை அடுத்து இப்போது அடுத்த கட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார் யோகி. ஆண்டு தோறும் ஆடி மாதங்களில் நடைபெறும் கன்வார் யாத்ரா போகும் வழிப்பாதைகளில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக வலதுசாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டை ஒட்டி, கடை உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களைக் கடை முன்பாக எழுதி மாட்ட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கன்வார் யாத்ரா என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் காவடி திருவிழாவைப் போன்றது. இந்தக் காலங்களில் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வார்கள். உபியில் தொடங்கி அண்டை மாநிலமான உத்தரகண்ட்டில் உள்ள ஹரிதுவார் சென்று இந்த யாத்திரை முடிவடையும். அந்த ரூட்டில் உள்ள உணவகங்களில்தான் அசைவ உணவு வேண்டும் என்றே விற்கப்படுவதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கும் வகையில்தான் இந்த உத்தரவை யோகி வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவு குறிப்பாகச் சிறுபான்மை உள்ளூர் வணிகர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் முசாஃபர் நகரில் ஒரு பரபரப்பான சாலையில் ஸ்வீட் கடை உரிமையாளர் ஃபுர்கான் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ரம்ஜான், ஈத் பண்டிகையைக் கொண்டாடும்போது யாரும் கடைக்காரர் இந்துவா, முஸ்லிமா என்று கேட்டதில்லை. ஆனால், இப்போது எங்களின் அடையாளத்தை வெளியிடும்படி ஏன் கேட்கிறார்கள்? அப்படி எழுதிப் போட்டால் எனது கடையின் பெயரைப் பார்த்தவுடன் வாடிக்கையாளர்கள் பலர் திரும்பிப் போய்விடக் கூடும்" என்று கூறினார்.

முதலில் முசாபர் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தப் புதிய உத்தரவு, பின்னர் ஷாம்லி, சஹாரன்பூர் மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது கன்வார் யாத்ரா செல்லும் சாலை முழுவதையும் பாதித்துள்ளது. இந்த உத்தரவு மாநில பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கைரானா காவல்துறையினர் ஷாம்லி-பானிபட் சாலையில் திரங்கா தாபா நடத்தும் ரிஸ்வான் சவுத்ரி கடையை ஒரு மாதத்திற்கு மூடுமாறு கூறியுள்ளது என்று டிஒஐ செய்தி குறிப்பிடுகிறது. "பெரிய இழப்பை நான் சந்தித்திருக்கிறேன். சுத்தமான சைவ உணவை மட்டுமே நான் விற்பனை செய்கிறேன். நான் வெங்காயம், பூண்டு கூட பயன்படுத்துவதில்லை. நான் ஏன் கடையை மூட வேண்டும்?"என்று புலம்புகிறார்.
யோகியின் இந்த உத்தரவு பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், முசாபர் நகர் பாஜக எம்எல்ஏ கபில்தேவ் அகர்வால் இந்த உத்தரவை ஆதரித்துள்ளார். "இந்த உத்தரவில் எந்தத் தப்பும் இல்லை. சில நிறுவனங்கள் இந்து பெயர்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், சில நேரங்களில் அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்களாக உள்ளனர். அவர்கள் அசைவ உணவுகளை விற்கும்போதுதான் பிரச்சினை வருகிறது"என்கிறார் அகர்வால்.

டிஒஐ அறிக்கையின்படி, அரசின் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களைப் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டும் முயற்சி என கருதுகின்றனர். பிஜ்னூரில் ஸ்ரீகாது ஷியாம் சுற்றுலா தாபாவை நடத்தி வரும் முகமது இர்ஷாத், "இந்த உத்தரவு இரு சமூகங்களையும் காயப்படுத்துகிறது என்பதுதான் வேடிக்கை. எனது நிறுவனத்தில் சுத்தமான சைவ உணவுதான் விற்கப்படுகிறது. எனது பணியாளர்கள் இந்துக்கள். ஆகவே நஷ்டம் அடைவோம். வியாபாரத்தை வகுப்புவாத அரசியலுக்குள் இழுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இருக்கும் சாக்ஷி டூரிஸ்ட் தாபாவில் பணிபுரியும் ஷஃபாகத் அலி, இந்த உத்தரவால் 'கட்டாய விடுப்பு' தரப்பட்டு வீட்டில் உள்ளார். "ஆகஸ்ட் 6 ஆம் தேதி யாத்திரை முடியும் வரை எங்கள் முதலாளி எங்களை லீவு எடுக்கச் சொன்னார்" என்கிறார் அலி. இவரது முதலாளி லோகேஷ் பார்தி, "ஒரு வாரத்திற்கு முன்பு, தாபாவில் உள்ள உரிமையாளர், கடை ஊழியர்களின் பெயர்களை எழுதி மாட்டுமாறு போலீசார் எங்களிடம் சொன்னார்கள். ஆகவே எனது தாபாவில் முஸ்லிம் ஊழியர்களை வைத்திருக்க முடியவில்லை. எனவே லீவு கொடுத்துவிட்டேன்" என்கிறார்.
மீரட்டைச் சேர்ந்த பழ வியாபாரி முகமது இம்ரான், தனது பெயரைக் காட்டுவதால் உருவாகும் ஆபத்துகள் பற்றி கவலை அடைந்துள்ளார். "எனது பெயர் வண்டியில் எழுதப்பட்டால் எனது பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்? ஒரு கலவரம் வெடித்தால் என்ன நடக்கும்?" என்று அழாத குறையாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications