வீடு கட்ட போறீங்களா? ஹவுஸ் லோன் எடுக்க போறீங்களா? எகிறபோகும் EMI.. ஈரான் போரால் எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் மேகங்கள், வெறும் சர்வதேச அரசியல் விவகாரமாக மட்டும் முடிந்துவிடவில்லை. பாரசீக வளைகுடாப் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள முடக்கம், இந்திய ரியல் எஸ்டேட் துறையை நிலைகுலையச் செய்துள்ளது.
உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் மிகக்குறுகிய பாதை இது. வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாதையை அடைத்தால், ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும் என்பது ஈரானின் கணக்கு.

வழக்கமான கடல் வழித்தடங்கள் அடைபட்டுள்ளதால், சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் 'நன்னம்பிக்கை முனை' (Cape of Good Hope) வழியாகச் சுற்றி வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் 10 முதல் 20 நாட்கள் வரை அதிகரித்துள்ளது. அனராக் (Anarock) ஆய்வறிக்கையின்படி, ஒரு கன்டெய்னருக்கு சுமார் ₹1.5 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது.
கட்டுமானப் பொருட்கள் விலை அதிரடி உயர்வு!
இந்தியாவின் வானளாவிய கட்டிடங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக:
இரும்பு (Steel): டன் ஒன்றுக்கு ₹62,000-ஆக இருந்த விலை, தற்போது ₹72,000-ஆக (20% உயர்வு) எகிறியுள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானச் செலவில் சதுர அடிக்கு ₹50 வரை கூடுதலாகச் சுமையை ஏற்றும்.
அலுமினியம்: பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள ஆலைகள் முடங்கியுள்ளதால், அலுமினியம் விலை டன் ஒன்றுக்கு ₹3.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இது டெல்லி போன்ற நகரங்களில் உள்ள நவீன அலுவலகக் கட்டிடங்களின் (Glass Facade) பட்ஜெட்டை பதம் பார்க்கிறது.
பிற்றுமின் (Bitumen): சாலைக் கட்டுமானத்திற்கு அவசியமான இதன் விலை டன் ₹51,000 வரை உயர்ந்துள்ளது. இது மும்பை-நாசிக் எக்ஸ்பிரஸ்வே போன்ற முக்கியத் திட்டங்களைப் பாதிக்கும்.
சொகுசு வீடுகளுக்கு 'செக்'!
சென்னை ஈசிஆர், பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, மும்பையின் வொர்லி, பிகேசி (BKC) போன்ற பகுதிகளில் கட்டப்படும் அல்ட்ரா-லக்சரி வீடுகள் தான் இதில் பலத்த அடி வாங்கியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இத்தாலிய மார்பிள் கற்களுக்கு, இந்த வழித்தட மாற்றத்தால் மட்டும் சதுர அடிக்கு ₹50 முதல் ₹150 வரை கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஒரு சதுர அடி மார்பிள் பதிக்க மட்டும் ₹6,000 வரை செலவாகும் சூழல் நிலவுகிறது.
ஏற்கனவே வீடு வாங்கியவர்களின் கதி?
புதிதாக வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே கடன் வாங்கி இஎம்ஐ (EMI) கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது கெட்ட செய்திதான். கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க முன்வராது. தற்போதைய சூழலில் 7.35% முதல் 13.20% வரை இருக்கும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால், மாதத் தவணை குறையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மீட்சி எப்போது?
ஒருவேளை போர் இன்று முடிவுக்கு வந்தாலும், நிலைமை சீராக 1 முதல் 3 மாதங்கள் வரை ஆகும் என்கிறது அனராக் அறிக்கை. தேங்கிக் கிடக்கும் கப்பல்கள் கரை சேரவும், காப்பீட்டுக் கட்டணங்கள் குறையவும் காலம் பிடிக்கும். எனவே, உங்கள் கனவு இல்லத்தின் விலை குறைய இன்னும் சில காலம் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!












Click it and Unblock the Notifications