ஜனநாயக கடமை ஆற்றிய 105 வயது மாரப்பன்...103 வயது அரசன் - ஆசி பெற்ற தேர்தல் அலுவலர்கள்
இளைஞர்களே வாக்களிக்க தவறும் போது 105 வயது முதியவர் ஒருவரும், 103 வயது முன்னாள் ராணுவ வீரரும் கம்பீரமாக நடந்து வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.
கோவை: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. பொது விடுமுறை விடப்பட்டும் இளைய தலைமுறையினர் வாக்களிக்க தவறிய நிலையில் 105 வயதான மாரப்பன் என்ற முதியவரும் 103 வயதான அரசன், அவரது மனைவி 90 வயதான சிவகாமியும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் குறைந்த அளவே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவல் அச்சமின்றி மக்கள் காலை முதலே அலை அலையாக வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றியும் சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வயதான வாக்காளர்
கோவை கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த 105 வயதான முதியவர் மாரப்பன் இன்று கம்பீரமாக நடந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். இவர் 1952 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் தவறாது வாக்களித்துள்ளார்.

காந்தி, காமராஜர் கால வாக்காளர்
1916 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 1 ஆம் தேதி பிறந்த மாரப்பனுக்கு தற்போது அவரது வயது 105. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காந்தியடிகள், காமராஜர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை பார்த்தவர் மாரப்பன்.

காலில் விழுந்து ஆசி
105 வயது ஆன போதும் தள்ளாத வயதிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார் மாரப்பன். வாக்களிப்பதிலும், வயதிலும் சீனியரான மாரப்பனின் காலில் விழுந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் ஆசி பெற்றனர். 105 வயது ஆன போதும் தள்ளாத வயதிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார் மாரப்பன். வாக்களிப்பதிலும், வயதிலும் சீனியரான மாரப்பனின் காலில் விழுந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் ஆசி பெற்றனர்.

மனைவியுடன் வாக்களித்த ராணுவ வீரர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழை மேடு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த 103 வயது முதியவர் அரசன் இன்று தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். ஜவல்பூரில் இந்திய இராணுவத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வேலை பார்த்தவர். 90 வயதான தனது மனைவி சிவகாமி உடன் மதியம் தழுதாழை மேடு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப் பள்ளியில் வந்து வாக்களித்தார்.












Click it and Unblock the Notifications