கோவை மேயரின் அரசு பங்களாவில் 10 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்.. பதறவைத்த மாநகராட்சி ஊழியர் கைது
கோவை: கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தங்கி இருக்கும் அரசு பங்களாவில் இரவு 10 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று நேற்று மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி செய்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி இருந்து வருகிறார். இவர் வசித்து வரும் ஆர்.எஸ்.புரம் அரசு பங்களாவில் இரவு 10 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேயரின் அரசு பங்களாவுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த எண் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருடையது என்பது தெரியவந்தது. மேலும், ஆனந்த் கோவை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பிளம்பர் பணி செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்காலிக ஊழியர் ஆனந்தை கைது செய்த கவுண்டம்பாளையம் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், குடும்பப் பிரச்சனையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications