"பூமராங்".. ஏன் லேட்? ஸ்டாலின் விட்ட டோஸ்.. எடப்பாடி அனுப்பிய மெசேஜ்! கோவையில் டீம் சேர்ந்த 9 பேர்
கோயம்புத்தூர்: தங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனைகளை பட்டியலிட்டு அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி வருகின்றனர்.
உங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்க முடியாத திட்டங்கள், முடங்கிக் கிடக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எல்லா எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை கொடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

என்ன கோரிக்கை
அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது, என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறினார்.

பாஜக எம்எல்ஏ
திமுக எம்.எல்.ஏ. க்கள் கூட இதில் கவனம் செலுத்தாத நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கவனம் செலுத்தினார். கோவை கலெக்டரை சந்தித்து தனது தொகுதி பிரச்சனைகளைப் பட்டியலிட்டிருந்தார். பிரச்சனைகளை கலெக்டரிடம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அது தங்களுக்கே பூமாராங் போல் தாக்குமே என்று நினைத்து பட்டியல் கொடுப்பதை தவிர்த்து வந்தனர் ( இவைகளை ஒன் இந்தியா தமிழில் பதிவு செய்திருந்தோம்). இன்னொரு பக்கம் திமுக எம்எல்ஏக்கள் சிலரும் அசட்டையாக கோரிக்கைகளை வைக்காமல் காலம் தாழ்த்தி உள்ளனர்.

எம்எல்ஏக்கள்
அதன் பிறகு, திமுக தலைமையிடமிருந்து எம்.எல்.ஏ.க்களுக்கு செம டோஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து,. தற்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே மாவட்ட கலெக்டர்களிடம் பட்டியலை கொடுக்கத் துவங்கியுள்ளனர். அதேபோல, எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக எம்.எல்.ஏ. க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்த திட்டங்கள் இந்த ஆட்சியில் எப்படி முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு திமுக ஆட்சியில் தொடங்க வேண்டிய திட்டங்களை எப்படியெல்லாம் முடக்கி வைத்துள்ளனர் என்பதையும் பட்டியலிடுங்கள்.

பட்டியல்
இந்த பட்டியலை தயாரித்து கலெக்டரிடம் கொடுங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். முதல் கட்டமாக, கோவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவும், எடப்பாடியின் உத்தரவை செயல்படுத்தவும் கோவை கலெக்டரை சந்தித்து பட்டியல் கொடுத்துள்ளனர். சமீபத்தில் கோவை எம்எல்ஏக்கள் சிலர் திமுக பக்கம் செல்லலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல அரசியல் கிசுகிசுக்கள் வெளியாகின.

மனுக்கள்
இந்த நிலையில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் கோவையில் ஒன்றாக இந்த மனுவை கொடுத்துள்ளனர். திமுக, அதிமுக கட்சிகளின் தலைமைகள் உத்தரவுக்கேற்ப அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சுறுசுறுப்பாக இயங்கும் நிலையில், சென்னையில் திமுக எம்.எல்.ஏ.க்களிடமும் அந்த வேகம் இல்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் இன்னும் பெரும்பாலான திமுக எம்எல்ஏக்கள் இது தொடர்பாக மனுக்களை ஆட்சியரிடம் கொடுக்கவில்லை என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications