ரன்வேயில் சென்ற மும்பை விமானம்... திடீரென அலறி துடித்த ஆடிட்டர்.. கோவை ஏர்போர்டில் பரபரப்பு
கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆடிட்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மரணம் மிக மோசமானது.. எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. திடீரென வந்துவிடும். நன்றாகத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சில நிமிடங்களில் இறந்துவிடுவார்கள் ஹார்ட் அட்டாக் முதல் முறை சிலருக்கு கடுமையாக இருக்கும். இரண்டாவது முறை சிலருக்கும், மூன்றாவது முறை சிலருக்கும் கடுமையாக இருக்கும். பெரும்பாலும் முதல்முறை அட்டாக் ஏற்படும் போது தான் பலரும் இறந்துள்ளார்கள். அப்பபடித்தான் கோவை விமான நிலையத்தில் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6.45 மணியளவில் மும்பை விமானம் கோவையில் இருந்து செல்வது வழக்கம். அதன்படி அந்த விமானம் செவ்வாய் கிழமை காலை வழக்கம்போல் புறப்பட்டு கொண்டிருந்தது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த ஆடிட்டரான 51 வயதாகும் லோகநாதன் (வயது 51 மும்பை சென்று அங்கிருந்து புனே செல்ல விரும்பினார். இதற்காக லோகநாதன் நேற்று காலை கோவை விமானநிலையத்திற்கு வந்தார்.
பின்னர் லோகநாதன் மும்பை செல்லும் விமானத்தில் ஏறினார். காலை 6.45 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் வேகமாக சென்றுகொண்டு இருந்தது. இன்னும் சில நிமிடத்தில் வானத்தில் பறக்க வேண்டிய நிலையில் விமானம் இருந்தது அப்போது லோகநாதனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.இதைப்பார்த்ததும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்கள்.
சத்தம் கேட்டு பணிப்பெண்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது லோகநாதன் நெஞ்சுவலியால் அலறியது தெரியவந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே விமானம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகளுக்கும், மருத்துவ குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மருத்துவ குழுவினர் லோகநாதனை மீட்டு உடனே விமானநிலைய ஆம்புலன்சில் ஏற்றினார்கள். பின்னர் கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள்.
அங்கு ஆடிட்டர் லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே லோகநாதனை இறக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மும்பை விமானம், சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை சென்றது. மும்பை விமானத்தில் ஏறியவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications