கோவையில் நொடி பொழுதில் சரிந்த வீடுகள்.. வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நல்ல செய்தி
கோவை: கோவை சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இங்கு கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்ட நிலையில், 2 மாடி வீடு மற்றும் அதன் அருகே இருபுறமும் 2 ஓட்டு வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. இந்நிலையில் சங்கனூர் ஓடையில் 3 வீடுகள் விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று வீடு வழங்கப்பட உள்ளது.
கோவை மாநகரில் ஓடும் சங்கனூர் ஓடை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ்புரம், புலியகுளம் வழியாக சிங்காநல்லூர் குளத்தை அடைகிறது. அதன் பிறகு நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நல்ல ஆறாக ஓடிக்கொண்டிருந்த சங்கனூர் ஓடை, தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது.. இதன் காரணமாக ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சங்கனூர் ஓடை தூர்வாரப்படுவதுடன், இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகிறது.
இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பின்புறம் சங்கனூர் ஓடை செல்கிறது. ஓடையின் கரையோரம் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகரில் சங்கனூர் ஓடை தூர்வாரும் பணியின் போது சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் சுரேசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. இதனால் பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு 2 மாடி வீட்டில் திடீரென அதிர்வு ஏற்பட்டு வீடு சரிந்து ஓடைக்குள் விழுந்தது. அப்போது அந்த வீட்டின் இருபுறமும் ஒட்டி இருந்த 2 ஓட்டு வீடுகளும் ஓடைக்குள் விழுந்தன. ஒட்டுமொத்தமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
சுரேஷ் குடும்பத்தினர் வேறு வீட்டிற்கு போய்விட்டதாலும், அருகே உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அதிர்வு கேட்டு வெளியே வந்ததாலும் பெரும் அசம்பாவிதம் நடக்கவில்லை. அதேநேரம் ஓட்டு வீட்டிற்குள் இருந்த டி.வி., பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது. இதனிடையே சங்கனூர் ஓடையில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை இழந்து சோகத்தில் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து ரத்தினபுரி போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். வீடு இடிந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறும் போது, சங்கனூர் ஓடைக்குள் வீடுகள் சரிந்து விழுந்த சம்பவத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக கோவை மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவாக மாற்று வீடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அதன்பிறகு சங்கனூர் ஓடைக்குள் விழுந்த வீட்டை அப்புறப்படுத்தி மீண்டும் புனரமைப்பு பணிகளை நாங்கள் தொடங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications