உள்ளே வந்த டாப் அதிகாரிகள்! களத்தில் குதித்த செந்தில் பாலாஜி! கோயம்புத்தூரில் மீட்டிங்.. பின்னணி
கோயம்புத்தூர்: கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக தொடர்ச்சியாக பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை நடத்த என்ஐஏவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

பரிந்துரை
இந்த நிலையில் கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். கடந்த 15 நிமிடங்களாக இவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் இல்லை. இந்த நிலையில்தான் கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பொறுப்பு அமைச்சராக அங்கு பல்வேறு பணிகளை செய்து வரும் செந்தில் பாலாஜி தற்போது சட்ட ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார். கோவையில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது, கார் வெடிப்பிற்கு பின் நிலைமை எப்படி இருக்கிறது, கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி
அதன்படி கோவையில் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யார், யார், கண்காணிப்பில் இருக்கும் நபர்கள் யார் என்று ஆலோசனை செய்துள்ளனர். ரோந்து பணிகளை அதிகரிப்பது எப்படி, இரவு நேரத்தில் ரோந்து பணிகளை அதிகரிப்பது எப்படி ஆலோசனை செய்துள்ளனர். முக்கியமாக சந்தேகத்திற்கு இடமாக சுற்றும் நபர்களை பிடித்து விசாரிப்பது, என்ஐஏ கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் நபர்களை விசாரிப்பது பற்றியும் போலீசார் உடன் இன்று அமைச்சர் செந்தில் ஆலோசனை செய்தார்.

ஆலோசனை
நேற்று முதல்வர் ஸ்டாலின் இதேபோல் கோவை சம்பவம் தொடர்பாக ஆலோசனை செய்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்

அறிக்கை
கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்: மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும். இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், ஊக்குவித்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications