கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
கோவை: கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெற்றோர்களை பதைபதைக்க வைக்கிறது. இதற்கு காரணம் திமுக என்றும், திமுக திராவிட மாடல் கட்சியல்ல, பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் 19 வயது மதிப்புமிக்க கல்லூரி மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்து இளைஞரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். போலீசார் தேடுதல் பணியின்போது நிர்வாண நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலத்த காயமடைந்த மாணவியின் ஆண் நண்பர் வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை விமான நிலையம் பின்புறம் 19 வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட போதை கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, பெண்ணை இழித்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நாக்கு கூசுகிறது, சொல்லுவதற்கு வெட்கமாக உள்ளது. பாதிக்கப்பட பெண்ணை ஆடை இல்லாமல் போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தமிழகத்தின் தற்போதைய கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது. இந்தியாவிலேயே பாதுகாப்பான, நாகரீகமான நகரம் கோவை என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கோவையிலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெற்றோர்களை பதைபதைக்க வைக்கிறது.
இதற்கு காரணம் இந்த திமுக, திராவிட மாடல் கட்சியல்ல.. பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது. கடந்த 2013 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது கனிமொழி பெரிய போராட்டம் நடத்தினார். கரூரில் நடந்த 41 படுகொலை இரவோடு இரவாக முதல்வர் வந்தார். ஆனால், முதல்வரும், கனிமொழியும் கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை வாய் திறக்கவில்லை.
கோவையில் கஞ்சா விற்பனை அதிகம் என்பதால் தான் இவ்வாறு நடப்பதாக எங்கள் கட்சியினர் தெரிவிக்கின்றனர். போதைக்கு இரண்டாவது தலை நகரமாக கோவை உள்ளது. 60 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இதுவரையிலும் மே மாதம் 5 ஆம் தேதி வரை 18,200 பாலியல் பலாத்காரங்கள் இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளது. 6 ஆயிரம் கொலை குற்றங்கள், 31 லாக்கப் மரணம் நடந்துள்ளது. போக்சோ குற்றம் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
நான் இதெல்லாம் சொன்னது சரியா, இல்லையா என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை விட வேண்டும். பெண்களுக்கு இரவில் நடமாட பாதுகாப்பு இல்லை. இன்று மாலை கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நாளை தமிழ்நாடு முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பெண்களை பெற்றோர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுப்பது சரியா?.
காவல் துறை நடவடிக்கை ஏற்புடையது இல்லை. காவலர்கள் வெட்டும் சூழல் நடைபெற்று வருகிறது. மாணவிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது திமுக ஆட்சியின் தோல்வி. நகரிகரமான ஊர் என கோவை சொல்லும்போது இப்படி நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகள் கண்காணிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டாஸ் சட்டத்தில் பிடித்துப் போட வேண்டும். ஆயுதக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது. கோவையில் துணை குடியரசுத் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு காவல் துறையின் மெத்தனப்போக்கு தான் காரணம்.
நூற்றுக்கு 200 சதவீதம் போலீசார் பாதுகாப்பு கோவையில் இல்லை என்றார்.
தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச விமான நிலையத்தின் அருகே இப்படி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளது. கோவைக்கு படிப்பு மற்றும் வேலைக்கு பெண்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் அணி சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இளம்பெண்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள பயிற்சி, பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்கு அளித்த அரசு நம்மளை காப்பாற்றவில்லை. என்கவுண்டர் போட்டால் தப்பித்து விடலாம் என அரசின் மனநிலை உள்ளது. எதுவாக இருந்தாலும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications