கோவையில் பெற்றோருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம்.. மகளும், மருமகனும் இப்படி கூடவா செய்வாங்க
கோவை: கோவையை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்த பூபதி மற்றும் மாலதி தம்பதிக்கு சொந்தமான சுமார் 33 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த மகள், மருமகன் கைது செய்யப்பட்டனர். தன்னுடைய பெற்றோர் இறந்துவிட்டதாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை மாற்றியுள்ளார் மகள்.. இந்த காரியத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக தற்போது மருமகனும் கம்பி எண்ணுகிறார்.
இன்றைக்கு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள நிலத்தின் மதிப்புக்கு உயிரோடு இருப்பவர்களை கூட இல்லை என்று சான்றிதழ் வாங்கி பெற்றவர்களின், உறவினர்களின் சொத்துக்களை வாங்கி வேறு யாருக்காது விற்றுவிடுகிறார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இப்படி உயிரோடு இருக்கும் போதே , இல்லை என்று கூறி மோசடி செய்த சம்பவம் கோவை பகுதியில் நடந்துள்ளது.

கோவையை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்த 76 வயதாகும் பூபதி (வயது 76). இவருடைய மகள் மாலதி (39). இவருடைய கணவர் பிரவீன்குமார் (41). இவர்கள் தங்கள் குடும்பத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள். பூபதிக்கு சொந்தமான 32.71 சென்ட் நிலம் கோவை இருகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை மாலதி தனது கணவருடன் சேர்ந்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டார்.
இதை அறிந்த பூபதி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தன்னிடம் இருந்த நில ஆவணங்களுடன் சிங்காநல்லூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நிலத்தை மாலதி போலி ஆவணம் தயாரித்து மோசடியாக மோகன்ராஜ் என்பவருக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.உடனே அவர் இதுபற்றி தனது மகள் மற்றும் மருமகனிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பூபதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பூபதி புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மாலதி தனது பெற்றோர் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்ததும், அந்த போலி ஆவணங்களில் பிரவீன்குமார் சாட்சி கையெழுத்து போட்டு நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாலதி, அவரது கணவர் பிரவீன்குமார் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெற்றோர் இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற மகளும், மருமகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications