கோவையில் திடீரென திறக்கப்பட்ட மேம்பாலம்.. திக்குமுக்காடிப்போன வாகன ஓட்டிகள்.. சட்டென மாறிய காட்சி
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம் பாளையத்தில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. விரைவில் இந்த பாலம் திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் இடையே மொத்த தூரம் 36 கிலோ மீட்டர். இதில் துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம், காரமடை வரை ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. ஏராளமான வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இத்துடன் கொங்கு நாடு கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஊட்டிக்கு இது தான் பிரதான சாலையும் கூட. இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக ஜிஎன் மில்ஸ் எனப்படும் கவுண்டர் மில்ஸ் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இங்கு 658 மீட்டர் தூரத்தில் ரூ.41 கோடியே 88 லட்சத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பால பணிகள் நடந்து வந்ததால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
பெரும்பாலான பணிகள் முடிந்திருக்கிறது. இன்னும் சில இடங்களில் தடுப்பு சுவர் உள்பட சில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை புதன்கிழமைகாலை 10 மணியளவில் இந்த மேம்பாலத்தை சோதனை ஓட்டத்துக்காக திறந்து விட்டார்கள் இதை தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் திக்குமுக்காடி போனார்கள். கடும் போக்குவரத்து நெரிசலில் சென்ற மக்கள் எளிதாக மேம்பாலத்தில் சென்றதால் பயணம் நேரம் அவர்களுக்கு குறைந்தது.
சோதனை ஓட்டம் ஏன்: மேம்பாலம் கட்டி முடித்த உடன் சோதனை செய்ய வாகனங்கள் இயக்கப்படும். வாகனங்கள் செல்லும் போது தான்
இந்த மேம்பாலம் தரமாக இருக்கிறதா? வாகனங்கள் செல்ல தகுதியானதா என்பதை அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியும். இதன்படியே மேம்பாலம் சோதனை ஓட்டத்துக்காக திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. தற்போது எளிதாக வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள். மூன்று நாள் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலத்தில் சோதனை ஓட்டத்துக்காக 3 நாட்கள் வாகனங்களை அனுமதித்துள்ளோம். நாளை (வெள்ளிக்கிழமை) வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அதுவும் பகல் நேரத்தில் மட்டும்தான் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிப்போம். இன்னும் சாலை நடுவே தடுப்புச்சுவர் வேலை, வர்ணம் பூசும் வேலை நடப்பதால் இரவில் செல்ல அனுமதி கிடையாது. அதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சோதனை ஓட்டம் நடத்திய பின்னர் அதன் தரம் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அரசிடம் இருந்து பாலத்தை திறக்க உத்தரவு வரும். அது வந்ததும் மேம்பாலம் கோவை மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications