அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்.. டெல்லி செங்கோட்டைபோல கோவையில் ஓர் பிரம்மாண்டம்
கோவை: இந்திய சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. தன்னலம் பாராமல் நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் தந்து நம் நாட்டின் விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளனர் சுதந்திர போராட்ட வீரர்கள். அப்படிப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை தினம் தினம் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான இடம் குறித்து தெரியுமா... வாங்க தெரிந்து கொள்ளலாம்...
கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை சாவடி பகுதியில், ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பில், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது "தேசபக்திக் கோட்டை". டெல்லியில் உள்ள செங்கோட்டை போலக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக, ராஜஸ்தானில் இருந்து கற்கள் எடுத்து வரப்பட்டு 2.3 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டையில் இந்திய விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சிராணி, சரோஜினி நாயுடு ஆகியோருடன் பெரிதாக அறியப்படாத பிராந்தியத் தலைவர்கள் குறித்த தகவல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. புகைப்படம் மட்டுமல்லாமல் சிப்பாய் கழகம் முதல் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்தது வரையிலான அனைத்து வரலாற்று தொகுப்புகளும் பொக்கிசமாக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜெய்ஹிந்த் பவுண்டேசன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தக்குமார் கூறுகையில், "வெளிநாடுகளில் சுதந்திர தினத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். முக்கியமாக வளைகுடா, அரபு நாடுகளில் தங்கள் சுதந்திர தினத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். உலகத்திலேயே இந்தியாவில் மட்டும்தான் இவ்வளவு பேர் உயிர் நீத்து போராடி சுதந்திரம் வாங்கியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் ஆங்கிலேயேர்களே வேண்டாம் என்று சொல்லி மட்டுமே சுதந்திரத்தை கொடுத்துச் சென்றுள்ளனர். இத்ததை பேர் போராடி சுதந்திரம் வாங்கிய பெருமை நம் நாட்டுக்கு மட்டுமே உண்டு. ஆனால் நம் நாட்டில் சுதந்திர தினம் என்றால், விடுமுறை தினம் என்றும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சாக்லேட் சாப்பிடும் நாள் என்றும் தான் நினைக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், சுத்திரத்தின் மகத்துவம் குறித்து குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.

2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆகஸ்ட் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகள் குறித்து காட்சிப்படுத்தியிருந்தோம். அதற்கு குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர் ஆகிய அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவர்கள் மரியாதை செலுத்தியதைப் பார்த்தபோது, கல்வி நிறுவனங்களில் இதுகுறித்து முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்பது தெரிந்தது. இதை ஏன் நிரந்தரமாக வைக்கக் கூடாது என்று தோன்றியது. அப்படித்தான் சாவடி பகுதியில் என்னுடைய நிலத்தில் இந்த தேசபக்திக் கோட்டையை கட்டினோம். டெல்லி செங்கோட்டையைப் பார்வையிட்டுள்ளேன். சுதந்திரப் போராட்டம் தொடர்பாக, பஞ்சாப் அரசு ஜலந்தர் பகுதியில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ்நாட்டில் இருந்து வ.உ.சி, பாரதி ஆகியோர் குறித்து மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

அப்போதுதான் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து விவரங்களையும் வைக்க வேண்டும் என நினைத்தேன். இருப்பினும் நாங்களும் இங்கு முழுமையாக வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இணைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் முடிந்தளவு அனைத்து வீரர்கள் குறித்த விவரங்களையும் காட்சிப்படுத்த உள்ளோம். தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை இந்தியாவின் 150க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளோம். கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இந்தக் கோட்டையைத் திறந்து வைத்தார். பொதுமக்கள், மாணவர்கள் தினசரி காலை 9 முதல் மாலை 6 வரை இந்த தேசபக்திக் கோட்டையை பார்வையிடலாம்.

இங்கு பார்வையிட வருவோரிடம் இருந்து எந்தவிதமான நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. 15 அடி அகலம், 9 அடி உயரத்திலான கை ராட்டை ஒன்றும் வைத்திருக்கிறோம். காந்தி தென் ஆப்பிரிகாவின் சிறையில் இருந்தபோது ஸ்மித் என்கிற ஜெனரல் அவரை தினமும் நெஞ்சில் உதைப்பார். சில மாதங்களில் காந்தி அவரின் கையால் தைத்த ஷூ ஒன்றை ஸ்மித்துக்கு பரிசாக வழங்கினார். 'என் காலின் அளவு எப்படி சரியாக தெரிந்தது?' என அவர் கேட்டபோது, காந்தி தன் நெஞ்சுப் பகுதியை காட்டி, 'நீங்கள் உதைத்து உதைத்து உங்கள் கால் பதிந்துவிட்டது.' என்று கூறினார்.

ஸ்மித் அழுதபடியே காந்தியின் காலில் விழுந்துவிட்டார். ஸ்மித் யூ.கேவில் செட்டிலான பிறகு 1932ஆம் ஆண்டு காந்தி ஒருமுறை அங்கு சென்றார். ஸ்மித்தின் வீட்டுக்கு காந்தி சென்றபோது அவர் வீட்டு ஷோகேஷில் அந்த ஷூ இருந்ததை கண்டு ஆச்சரியப்படுள்ளார். அதற்கு ஸ்மித், என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இந்த ஷூ தான். அதனால் எப்போதும் என் பார்வையில் இருக்கும் வகையில் வைத்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதை நினைவுபடுத்தும் வகையில் ஷூ வைத்துள்ளோம். இப்படி எங்களால் முடிந்த வரலாற்று தொகுப்புகளை இங்கு ஆவணப்படுத்தி வருகிறோம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் தேசப்பற்றை ஊக்குவிப்பதுதான் இதன் முதன்மையான நோக்கம்." என்றார்.












Click it and Unblock the Notifications