என்னுடைய நேர்மை பற்றி பேச அண்ணாமலைக்கோ, எல்.முருகனுக்கோ அருகதை இல்லை.. பிரஸ் மீட்டில் ஆ.ராசா ஆவேசம்!
கோவை: "என்னுடைய நேர்மையைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்கோ எல்.முருகனுக்கோ அருகதை இல்லை" என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.
கோவை: மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பாக பன்னாட்டு மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையிலிருந்து நீலகிரிக்கு வந்த மலையக தமிழர்களுக்கு நில பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று இனம் பிரித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தருமாறு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முகாமில் இருக்கின்ற மலையக தமிழர்களில் எத்தனை பேருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பதை கண்டறிந்து அதனை அட்டவணைப்படுத்தப்படும். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர்களின் எல்லா பிரச்சினைகளையும் அறிந்தவன் என்ற வகையில் அறிக்கை சம்பந்தமாக முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி புதிய தீர்வை எட்டுவதற்காக முயற்சி செய்வேன் என ஈழத் தமிழர்களுக்கு உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பின்னர், தொடர்ந்து ஆ.ராசாவை விமர்சனம் செய்து வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்த ஆ.ராசா, "அண்ணாமலைக்கும் எல்.முருகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னுடைய நேர்மையைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்கோ எல்.முருகனுக்கோ பாஜகவுக்கோ அருகதை இல்லை" என்று ஆவேசமாக கூறினார்.
அண்மைக்காலமாகவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் திமுக எம்.பி ஆ.ராசாவை 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் எல்.முருகன் களமிறங்க உள்ளதாலேயே அவர் ஆ.ராசாவை குறிவைத்து பேசுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது கருத்துகள் பற்றிய கேள்விக்கு அலட்சியமாக பதில் அளித்துள்ளார் ஆ.ராசா.












Click it and Unblock the Notifications