சிசிடிவி இருக்குனு கூட பார்க்கலையே..எடுத்தேன் பாரு ஓட்டம்! விரட்டிய ஒற்றைக் கொம்பன்.. பரபர வீடியோ!
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகளால், மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கோவை அருகே சாலையில் வந்த ஒற்றை கொம்பு யானையை கண்டு பயந்து ஒட்டம் பிடித்த முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, கோவை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானை - மனித மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.

விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தாலும் யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து யானை மனித மோதல்களை தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும், மின்சார வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவை தடாகம் அருகே நடை பயிற்சி சென்ற நடராஜன் என்பவர் யானை தாக்கி பலியானார். மேலும், மின்வாரிய பொலிரோவை காட்டு யானை ஒன்று கவிழ்த்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், கோவை அருகே சாலையில் வந்த ஒற்றை கொம்பு யானையை கண்டு பயந்து ஒட்டம் பிடித்த முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தொண்டாமுத்தூர், சாடிவயல், மருதமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
யானைகளின் இடம் பெயர் காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து தமிழக வனப் பகுதிக்குள் வரும் யானை கூட்டம் சிறுமுகை, பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதி வழியாக முதுமலை, பந்திப்பூர் வனப் பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு வலசை செல்லும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுவது தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு வரும் யானைகளால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுவதால் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் பகுதியில் நேற்று இரவு ஒற்றை யானை புகுந்து உள்ளது.
இரவு முழுவதும் விவசாய நிலத்தில் இருந்த யானை இன்று காலை 6.30 மணி அளவில் அங்கு இருந்து வெளியேறி வனப் பகுதியை நோக்கி சென்றது. சாலையில் ஒற்றை கொம்பு யானை நடந்து வருவதை பார்த்த முதியவர் ஒருவர் பயத்தில் அங்கிருந்து ஓடிச் சென்றார். இந்த காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி யில் பதிவாகிய நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications