கோவையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கோவை: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். இதற்கு வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள கலெக்டர், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதையும் விளக்கியுள்ளார்.
கல்லூரிகளின் நகரமாக வளர்ந்துள்ள கோவையில் ஏராளமான அரசு, தனியார் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் கூட இந்த அளவிற்கு கல்லூரிகள் இருக்கிறதா என்பது சந்தேகமே .. ஏனெனில் அந்த அளவிற்கு அதிகமான கல்லூரிகள் கோவையில் இருக்கின்றன. கோவை தொழில் நகரம் என்பதை தாண்டி, கல்லூரிகளின் நகரமாக உள்ளது. கேரளாவின் நுழைவு வாயிலாக கோவை இருப்பதால், கேரளாவைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் கோவையில் படிக்கிறார்கள்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டர் கிராந்தி குமா ர்முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2024-25-ம் நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த இணையதளம் வழியாக வருகிற 28-ந் தேதிக்குள் மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25-ம் ஆண்டில் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகி தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கலெக்டர் கிராந்தி குமார் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications