ஒர்க்வுட் ஆன 2 பிளான்.. கோவையில் சிக்னலுக்கு 'குட்பை'.. மக்கள் செம்ம ஹேப்பி
கோவை; கோவையில் டிராபிக் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாலைக்கு ஏற்ப 'யு டர்ன்' அல்லது 'ரவுண்டானா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமான கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையில் சென்னையைப் போல் மெயினான சிக்னல்களில் எல்லாம்மேம்பாலம் எல்லாம் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மேம்பாலம் இருக்கிறது. சில இடங்களில் ரயில்கள் கடப்பதற்காக போடப்பட்டவை.

கோவை என்பது பல நகரங்கள் சந்திக்கும் சாலைகளை கொண்டவையாகும். கோவையில் மிகவும் பிரதான சாலை என்றால் அது அவிநாசி சாலை தான். அதற்கு அடுத்தபடியாக சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, ஆகியவை இருக்கின்றன.
இதுதவிர கோவையின் முக்கிய பகுதிகளையும இணைக்கும் பெரிய நெடுஞ்சாலைகளும் இருக்கின்றன. பிரதான சாலைகள் என்று இல்லாமல் கோவையின் முக்கிய பகுதிகளையும்இணைக்கும் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் இருக்கிறது. கோவை ஏராளமான சாலை சந்திப்புகள் இருப்பதால் போக்குவரத்து சிக்னல்களும் அதிக அளவில் உள்ளன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் காத்திருந்து செல்லும் நிலை நகர் முழுவதுமே அதிகமாக உள்ளது.
குறிப்பாக அவினாசி சாலையில், நீலாம்பூர் தொடங்கி உக்கடம் வரை வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். காலை அல்லது மாலை வேளைகளில் சென்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து சிக்னல்கள் ஏராளமான இடங்களில் இருப்பது தான்.
போக்குவரத்து சிக்னல்களில் மக்கள் குறைந்தது 30 விநாடிகள் முதல் 90 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிலசமயம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் கூட விரைந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதை தவிர்க்க 'யு டர்ன்' திட்டத்தை போலீஸார் செயல்படுத்தி உள்ளார்கள்.
முதற்கட்டமாக கோவை மாநகரில் முக்கிய சாலைகளில் சிக்னல்களில் காத்திருப்பதை குறைப்பதற்காக, சாலைக்கு ஏற்ப 'யு டர்ன்' அல்லது 'ரவுண்டானா' திட்டத்தை மாநகர போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள். இதில் யு டர்ன்'திட்டம் என்றால் சிக்னல்கள் மூடப்பட்டுவிடும்.
அதற்கு 100 மீட்டர் முன்பும், பின்பும் வாகனங்கள் திரும்ப தடுப்புக் கற்களை அகற்றி இடைவெளி ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த இடைவெளி வழியாக வாகனங்கள் 'யு டர்ன்' செய்து வேண்டிய இடங்களுக்கு செல்லும் வழியை உருவாக்கி வருகிறார்கள்.
அதேநேரம் சில இடங்களில் சாலை வசதி அகலமாக இருந்தால் 'ரவுண்டானா' திட்டமும் செயல்படுத்தி வருகிறார்கள். சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு தடுப்புக் கற்களை அமைத்து ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்கிறார்கள். இதனால் வாகனங்களை நிறுத்தாமல் தாராளமாக போகலாம்.
சரி கோவையில் எங்கெல்லாம் தற்போது யூடர்ன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது: கோவை மாநகரில் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, எஸ்.ஓ பங்க் சந்திப்பு, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த 'யு டர்ன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரவுண்டா திட்டம் எங்கெல்லாம் அறிமுகம்: கோவை நகரில் சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலையில் வின்சென்ட் சாலை பிரிவு, கிக்கானி பள்ளி சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, லாலி சாலை சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ரவுண்டானா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் கூறுகையில், "இருக்கும் இடத்தில் உள்ள வசதியை பயன்படுத்தி வாகனங்கள் காத்திருக்காமல், நெரிசலின்றி செல்லவும் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். இந்த திட்டம் பயன் அளித்தால் நிரந்தரமாக்கப்படும்" என்றார்.
கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இந்த புதிய திட்டம் குறித்து கூறும் போது, "புதிய முயற்சியாக பல இடங்களில் சிக்னல்களை அகற்றிவிட்டு 'யு டர்ன்' போட்டு செல்லவும், ரவுண்டானா முறையில் செல்லவும் திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். இந்த புதிய திட்டம் காரணமாக கோவை மக்கள் காலதாமதம் இல்லாமல் சாலையில் பயணிப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு 10 சதவீதத்துக்கு மேல் விபத்துகள் குறைந்துள்ளன.
சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளதால் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம் காரணமாக சிக்னல் அமைக்க சாலை பாதுகாப்பு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, பாதசாரிகள் சாலையை கடக்க கட்டமைப்பு ஏற்படுத்த பயன்படுத்த போகிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications