சூரிய வீடு இலவச மின்சாரம்.. மின் கட்டணம் உங்களுக்கு எவ்வளவு மிச்சம்.. கோவை மின்வாரியம் விளக்கம்
கோவை: வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தி மானியம் பெறலாம் என்று கோவை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள், மானியங்கள் போன்ற விவரங்களையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமரின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின்படி வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட உள்து.

வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் மாடியின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் விலை உயர்ந்தது என்பதால் இதுவரை மக்கள் இந்ததிட்டத்தில் சேரவில்லை.. அதேநேரம் பெரிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் சேர அதிக ஆர்வம் காட்டி வந்தன.
இந்த நிலையில் தான் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின் படி, மாத மின் நுகர்வு வீடுகளில் சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். அதேபோல் 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினால் ரூ.78,000 மானிய உச்சவரம்பு கிடைக்கும்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கோவை மின்வாரிய அலுவலகம் நேற்று அறிக்கை வெளியிட்டிந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: "பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இத்திட்டத்தில் www.Pmsurya ghar.gov.in என்ற இணையதளம் அல்லது www.solarrooftop.gov.in என்ற இணையதளம் மற்றும் "PM-Suryaghar" என்ற செயலி அல்லது "QRT PM surya Ghar" என்ற செயலி ஆகியவற்றில் ஏதோ ஒன்றில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் மின் கட்டண ரசீதை மட்டுமே பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோவாட் திறனுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட் மின் திறனுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. சூரிய சக்தி தகடு பொருத்தும் பணி முடிவுற்ற 7 முதல் 30 நாட்களில் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்படுகிறது. எனவே கோவை மின்பகிர்மான பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கோவை மின்வாரியம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
சூரிய ஒளி மின் தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை பயன்படுத்துவோர் இரண்டு மாதங்களில் சுமார் 558 ரூபாய் சேமிக்க முடியும் என்றும், 400 யூனிட் பயன்படுத்துவோர் சுமார் 900 ரூபாய் சேமிக்க முடியும் என்றும், 500 யூனிட் பயன்படுத்துவோர் சுமார் 1143 ரூபாய் சேமிக்க முடியும் என்றும், 600 யூனிட் பயன்படுத்துவோர் 1718 ரூபாய் யூனிட் சேமிக்க முடியும் என்றும் கோவை மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications