இன்னொருத்தனையும் கண்டுபிடிக்கணும்.. அவனையும் விடக் கூடாது.. கோவை சிறுமியின் தாய் ஆவேசம்!
சந்தோஷ்குமாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை சிறுமியின் தாய் வரவேற்றுள்ளார்
கோவை: "இன்னொருத்தனையும் கண்டுபிடிச்சு.. அவனுக்கும் இதே மாதிரி அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். என் குழந்தைக்கு நடந்தது மாதிரி இனி எந்த குழந்தைக்குமே நடக்கக்கூடாது.. இதுபோன்று எங்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சரி.. அங்கு சென்று நான் போராடுவேன்" என்று 6 வயது சிறுமியின் தாய் வனிதா, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை 32 வயது சந்தோஷ்குமார் என்ற கொடியவன் சீரழித்தான்.. கை கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்து.. கொன்றே விட்டான்.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 25-ம் தேதி நடந்தது. மார்ச் 31-ம் தேதி சந்தோஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கும் நடந்து வந்த நிலையில், போன 18ம் தேதி கோவையில் புதிதாக போக்சோ சிறப்பு கோர்ட் தொடங்கப்பட்டதும், இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணையும் நடந்து வந்தது.

வனிதா
அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. அதனால் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. அப்போது, திடீர் திருப்பமாக இந்த வழக்கில் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் வனிதா கோர்ட்டில் மனு அளித்தார்.

திடீர் திருப்பம்
வழக்கை மறுவிசாரணை நடத்தி, இன்னொரு குற்றவாளியையும் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும், டிஎன்ஏ ஆய்வு முடிவுகளை மேற்கோள்காட்டி இந்த வழக்கில் கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து திரும்பவும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தூக்கு
இந்நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோஷ்குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவனை குற்றவாளி என்று கோர்ட் தெரிவித்தது. மேலும் சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி
இந்த தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய், வழக்கில் தொடர்புடைய இன்னொரு நபரையும் சீக்கிரமாக கண்டுபிடித்து, அவனுக்கும் இப்படி ஒரு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு என்னுடைய நன்றி.. என் குழந்தைக்கு நடந்தது மாதிரி இனி எந்த குழந்தைக்குமே நடக்கக்கூடாது.. இதுபோன்று எங்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சரி.. அங்கு சென்று நான் போராடுவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications