ஏனுங்.. நான் கோயிலுக்கு போயிட்டு இருக்கேனுங்.. அழுத மூதாட்டி.. கோவை பாஜக போராட்டத்தில் பரபரப்பு
கோவை: கோவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்க அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் பாஜகவின் போராட்டம் நடத்திய நிலையில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியை போலீசார் தவறுதலாக வேனில் ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையை அடுத்த வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்த புகைப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் புகைப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பிரதமர் புகைப்படத்தை அலுவலகத்தில் மாட்ட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பாஜக எதிர்ப்பு
இதுதொடர்பாக மனு அளிக்க பாஜகவினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். 5 பேரை மட்டும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துமீறி உள்ளே நுழைய முயன்று போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பாஜகவினர் கைது
இதனால் போலீசாருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். 100க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மூதாட்டியை வேனில் ஏற்றிய போலீசார்
முன்னதாக கோவையை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த பச்சியம்மாள் என்ற மூதாட்டியையும் போலீசார் தவறுதலாக போலீசார் வேனில் ஏற்றினர். அதாவது பச்சியம்மாள் தனது மகளுடன் தண்டு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர் நடந்து சென்றபோது பாஜகவினர் போராட்டத்தை பார்த்து கொண்டிருந்தார். இந்த வேளையி்ல் அவரும் போராட்ட குழுவை சேர்ந்தவர் என நினைத்து வேனில் ஏற்றினர்.

அழுததால் இறக்கிவிட்டனர்
இதனால் அவர் பதறிப்போனார். மேலும் தான் போராட்டத்துக்கு வரவில்லை. கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறேன் என கூறி அழுதார். இதையடுத்து அவரை போலீசார் வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications