எண்ணி 50 ஆவது நாள்.. கோவை அவிநாசி சாலையில் நடக்கப்போகும் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்
கோவை: கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் கோவை கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் மேம்பாலம் பணிகள் 93 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மாநகரின் முக்கியப் போக்குவரத்து வழித்தடமான இந்த மேம்பாலப் பணிகள் குறித்து அமைச்சர் எவ வேலு முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
கோவை மாநகரில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இப்பிரச்சனையை சரிசெய்யும் வகையில், தொடர்ந்து மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் அவிநாசி சாலையும் ஒன்றாகும். பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல என பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான மக்கள் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்த சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தின் மிக முக்கியமான கட்டம் தற்போது நெருங்கி வருகிறது. இந்த மேம்பாலப் பணியானது தற்போது வரை சுமார் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மாநகரின் முக்கியப் போக்குவரத்து வழித்தடமான இந்த மேம்பாலப் பணிகள் குறித்து அமைச்சர் எவ வேலு முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமானப் பணிகள், உப்பிலிபாளையம் மேம்பாலப் பணிகளை தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: 245 கோடி ரூபாயில் இந்த நூலகத்தின் கட்டிடமும், 50 கோடி ரூபாயில் புத்தகங்களும், 5 கோடி ரூபாயில் கணினி உள்ளிட்டவைகளை சேர்த்து 300 கோடியில் இந்த நூலகம் அமைய உள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள் முடிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 305 இருக்கைகள் கொண்ட உள் கலையரங்கம் இங்கு அமையவுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப் பிரிவு, தமிழ் நூல்களுக்கு தனிப் பிரிவு, ஆங்கில நூல்களுக்கு தனிப் பிரிவு ஆகிய அமையவுள்ளது. டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேற்கு புறவழிச்சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டெண்டர் விடும் பணிகள் தற்போது நடைபெறவுள்ளது. மூன்றாவது கட்டமாக நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கோல்ட்வின்ஸ் - உப்பிலிபாளையம் மேம்பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு கீழ் நடைபாதை உடன் கூடிய 1.5 மீட்டர் டிரைன் பணிகளும் சேர்ந்து நடைபெற்ற வருகிறது. சுமார் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலப் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடையும்.
ஜனவரி மாதம் முதல்வரால் நூலகம் திறப்பு விழா காணப்படும். சிங்காநல்லூர் மேம்பாலம் ஒன்றிய அரசின் கீழ் வருகிறது. புதிய வரையறை போடப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. கோவை - திருச்சி சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தான கேள்விக்கு, 3500 கோடி ரூபாய்க்கு கிரீன் பீல்ட் சாலை என்று அறிவிப்புடன் அது இருந்தது. இது சம்பந்தமாக நிதின் கட்கரியிடம் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தை டெண்டர் அளவிற்கு கொண்டு வந்துவிட்டு மற்ற பொறுப்பையும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஏற்றுக் கொண்டுள்ளது.
திருவண்ணாமலையில் தமிழக வெற்றி கழகத்தின் பாரதிதாசன் பண மாலை அணிவித்து பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறித்தான கேள்விக்கு, அவர் என்ன செய்தார் என்று எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை அவர் என்னுடைய வாக்காளர். சென்ற முறை அவர் எனக்கு வாக்களித்தவர். அவரது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். அவரது அண்ணன் தம்பிகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள்.
எனக்கு நெருக்கமான குடும்பம். அந்தக் குடும்பத்தை பொருத்தவரை எனக்கு நெருக்கமானவர்கள் தான். அவர்கள் இல்லம் கட்டினார்கள் அதற்கான பத்திரிக்கையை என்னிடம் கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நான் பொதுவாக கட்சியை பார்ப்பவன் கிடையாது. திருவண்ணாமலையை பொறுத்தவரை யார் எனக்கு அழைப்பு கொடுத்தாலும், நான் அந்த சட்டமன்றத்தின் உறுப்பினர் என்னை மதித்து வந்து அழைப்பிதழ் கொடுத்த காரணத்தினால் நான் அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன் அவ்வளவுதான் என்றார்.












Click it and Unblock the Notifications