"ஸ்டிக்கர்" அரசியல் வேலைக்காகாது.. தமிழ் மனங்களில் உள்ள மோடி இமேஜ்ஜை அழிக்க முடியாது! மத்திய அமைச்சர்
கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நிகழ்ச்சி ஒன்றில் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தமிழகம் வந்து இருந்தார்.
அதேபோல சில நாட்களுக்கு முன்பு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி வேலூர் மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார்.

நரேந்திர சிங் தோமர்
இந்தச் சூழலில் இப்போது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோவை வந்து உள்ளார். அங்குப் பொள்ளாச்சி - கோவை சாலையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தென்னை விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். விவசாய பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

தன்னிறைவு
அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "நமது நாட்டின் விவசாயத் துறை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு முக்கியமானது. சர்வதேச அரங்கில் இந்தியா விவசாயத்துறையில் தன்னிறைவு அடைந்த ஒரு நாடாகவே விளங்கி வருகிறது. விவசாயத் துறையில் உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

விவசாயிகள் வங்கிக் கணக்கு
இதற்கான தரவுகளை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் புரியும். நமது நாடு முன்னேற வேண்டும் என்றால், நமது விவசாயிகள் முன்னேற வேண்டும். விவசாயிகள் எவ்வித கஷ்டமும் படக்கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடி ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும் ரூ.6,000 செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். இப்படி இதுவரை மட்டும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மீது அட்டாக்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு உதவி என்று ரூ.100 அனுப்பினால், அதை இடைத்தரகர்களே முழுங்கி விடுவார்கள். கடைசியில் விவசாயிகளுக்கு வெறும் 15 ரூபாய் தான் சென்று சேரும். பிரதமர் நரேந்திர மோடி இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டார். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அனுப்பும் தொகை நேரடியாகவே அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்கிறது.

ஸ்டிக்கர் அரசியல்
தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொடுத்து இருக்கிறது. ஆனால், இங்குள்ள மாநில அரசு அதையெல்லாம் திருட முயல்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் வேண்டுமென்றால் நீங்கள் ஸ்டக்கர் ஒட்டி அறிவித்துக் கொள்ளுங்கள். ஆனால், தமிழக மக்கள் மனதில் பிரதமர் மோடிக்குத் தனி இடம் இருக்கிறது. அந்த பிம்பத்தை யாராலும் அழிக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி
முன்னதாக நேற்றைய தினம் கோவை ஈஷா மையத்தில் தங்கியிருந்த மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மனு ஒன்றை அளித்தார். உரத்தட்டுப்பாடு, கொப்பரை தேங்காய் விலை நிர்ணயம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கக் கோரி மத்திய வேளாண் அமைச்சரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு அளித்தார்.












Click it and Unblock the Notifications