கோவையில் பிரியாணி போட்டி! பொதுமக்களுக்கு இடையூறு! ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு!
கோவை: கோவையில் பிரியாணி போட்டியை நடத்த எந்தவித முன் அனுமதியும் பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற உணவகம் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ 1 லட்சம் பரிசும், 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ 50 ஆயிரம் பரிசும், 3 பிரியாணி சாப்பிட்டால் ரூ 25 ஆயிரம் பரிசும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த பிரியாணி போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர். அது போல் அருகே உள்ள கேரளாவிலிருந்தும் நிறைய பேர் வந்தனர். அவர்கள் தாங்கள் வந்த வாகனத்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றனர்.
முண்டியடித்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் கூடியதாக கோவையின் முக்கிய பகுதிகளான அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகர கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம் போன்றவற்றை இணைக்கும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். அது போல் எந்த முன்னறிவிப்பும் இன்றி பொது இடத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டியதற்காக பிரியாணி போட்டி நடத்திய அந்த உணவகத்தின் மேலாளர் கணேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த போக்குவரத்து பாதிப்பு, விதிமீறல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வந்திருந்தவர்களால் பிரியாணியை சாப்பிட முடியாமல் திணறினர். அப்போது அங்கு ஹோட்டல் உரிமையாளர் பாபி செம்மனூர் வந்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 24 மணி நேரமும் இந்த ரெஸ்டாரென்ட் செயல்படும் வகையில் தொடங்கியுள்ளோம்.
ஒரு ஜாலிக்காகத்தான் இந்த பிரியாணி போட்டியை நடத்தினோம். இதில் கலந்து கொள்ள 400 பேர் புக் செய்திருந்தனர். ஆயிரம் பிரியாணி தயாராக இருந்தது. தேவைப்பட்டால் கூடுதலாகவும் சமைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆம்புலன்ஸ் கூட ரெடியாக வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த பிரியாணி போட்டியில் யாராலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை. எனினும் அதிக பிரியாணி சாப்பிட்ட 3 பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் 3 பிரியாணி சாப்பிட்டு பரிசுத் தொகையை பெற்றார்.
அது போன்று கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் இரண்டரை பிளேட் பிரியாணி சாப்பிட்டு இரண்டாம் பரிசையும் மற்றொருவர் இரண்டு பிளேட் பிரியாணி சாப்பிட்டு மூன்றாம் பரிசும் பெற்றனர்.












Click it and Unblock the Notifications