‛‛அடையாளம் தெரிந்தது’’.. கோவை நகைக்கடையில் 200 சவரன் கொள்ளையடித்த நபர் யார் தெரியுமா? ஷாக் தகவல்
கோவை: கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் நுழைந்து 200 சவரன் தங்கநகையை கொள்ளையடித்த நபரை 5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த நபரின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்துள்ள நிலையில் அவர் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று காலையில் நகைக்கடையை திறந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது நகைக்கடையில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இரவோடு இரவாக நகைக்கடைக்குள் நுழைந்த நபர் பல்வேறு வகையான நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நகைக்கடை மேலாளர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நகைக்கடை ஊழியர்களின் உதவியுடன் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் வெண்டிலேட்டர் துளை வழியாக உள்ளே நுழைந்து நகைக்கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. தனக்கு வேண்டிய நகைகளை பார்த்து பார்த்து அந்த நபர் தேர்வு செய்து கொள்ளையடித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
மேலும் அவர் தனது முகத்தை சட்டை கொண்டு முடியபடி 200 சவரன் நகைகளை அள்ளிச்சென்றதும், கடைசியாக கொள்ளையன் தனது சட்டையை கடையின் பார்க்கிங் பகுதியில் போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சட்டை மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கோவை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதோடு கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பிற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு மற்றும் விசாரணையின்போது நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் சிறிது தூரம் சென்று ஆட்டோவில் ஏறி உக்கடம் வழியாக பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி சென்றது கண்டறியப்பட்டது. இதனால் கொள்ளையன் பொள்ளாச்சியை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதையடுத்து விசாரணை இன்னும் தீவிரமாக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கொள்ளையனை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம் ஆணைமலையை சேர்ந்த நபர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது நகைக்கடையில் கொள்ளையடித்து தலைமறைவானதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. தற்போது கொள்ளையனை போலீசார் நெருங்கி உள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்பட உள்ளதாகவும், அதன்பிறகு அவரை பற்றி முழுதகவல்கள் வெளியிடப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கொள்ளையில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை எனவும், பின்னணியில் மேலும் சிலர் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அதுபற்றியும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications