பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. கோர்ட்டுக்கு வந்த இளம் பெண்.. ரகசிய வாக்குமூலம்.. சிக்கப்போவது யார்?
கோவை: பொள்ளாச்சி பாலியல் பயங்கர சம்பவத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.
இந்த பாலியல் வழக்கின் தீவிரத் தன்மையால், போலீஸ் விசாரணையிலிருந்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

புதிய ஆதாரங்கள்
இது தொடர்பாக தொடர்ந்து புதிய ஆதாரங்கள் கிடைத்தபடி உள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ம் தேதி அ.தி.மு.க. முன்னாள் மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன் பால் ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்தனர். இது அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைதானவர்களை அதிமுகவிலிருந்து நீக்கியது கட்சி தலைமை.

பெண்களுக்கு கொடுமை
இதுவரை பாதிக்கப்பட்ட 4 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல, வாக்குமூலம் அளிப்போர் குறித்த பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படுகிறது.

ரகசியம் காக்கப்படும்
புகார் கூறுவோர் ரகசியம் காக்கப்படுவதால் மேலும் பல பெண்களும் வாக்குமூலம் வழங்க முன்வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த 25ம் தேதி கோவை மகளிர் கூடுதல் கோர்ட்டில் பெண் நீதிபதி (பொறுப்பு) திலகேஸ்வரி முன்பு மேலும் ஒரு இளம் பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பலர் சிக்க வாய்ப்பு
வாக்குமூலம் அடிப்படையில், இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில், மேலும் ஒரு இளம்பெண் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல பாதிக்கப்பட்ட பெண்களும் புகார் அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கதறிய பெண்கள்
கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி, குடும்ப தலைவிகளையும் ஏமாற்றி, ஆசை வலையில் விழ வைத்து அதை வீடியோவாக எடுத்தது பாலியல் கும்பல். சில பெண்கள் அண்ணா விட்டு விடுங்கள் என கதறிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications