வேலைக்கு போன இடத்தில் மலர்ந்த காதல்.. பொள்ளாச்சி மருமகளான மெக்சிகோ பெண்.. இந்து முறைப்படி திருமணம்!
கோவை: மெக்சிகோ நாட்டிற்கு வேலைக்கு சென்ற பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சவுத்ரி ராஜ் என்ற இளைஞர், தன்னுடன் பணியாற்றிய டனியாலா என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். கடல் கடந்த இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டியதால், பொள்ளாச்சியில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடைபெற்ற சுவாரசிய திருமணம் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... அது மட்டும் இல்லை.. காதலுக்கு எல்லையும் தான் கிடையாது.
மாநிலம் விட்டு மாநிலம் இல்லை. நாடு விட்டு நாடு.. இன்னும் சொல்லப்போனால் கண்டம் விட்டு கண்டம் கூட இப்போது காதல் கைகூடுகிறது.
தகவல் தொழில்நுட்பம் அதிகம் வளராத காலத்தில் கூட இதுபோன்ற அன்னிய நாட்டவர்களுடனான காதல் திருமணங்கள் நடந்ததாக சொல்கிறார்கள்... ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசப்பட்டினம் படத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரின் பெண்ணாக நடித்து இருக்கும் எமி ஜாக்சன், ஆர்யா மீது காதல் வயப்படுவார்.

மெக்சிகோ நாட்டு பெண்
ஆங்கிலேய பெண்ணான எமி ஜாக்சன் இந்திய இளைஞர் ஆர்யா மீது காதலில் விழும் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். சினிமாக்களில் மட்டும் அல்ல.. நிஜத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் தற்போதைய நவீன உலகில் உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்டது. அதேபோல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. இப்படி வெளிநாடுகளுக்கு செல்லும் பலரும் அங்கே காதல் வயப்படுவதுண்டு. இத்தகைய காதலை இரு வீட்டினரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விரும்பிய படி தங்கள் கலாசார முறையை பின்பற்றி பல இளைஞர்களும் தற்போது வெளிநாட்டு பெண்களை மணந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சுவாரசிய காதல் திருமணங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் பொள்ளாச்சியில் திருமணம் நடைபெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டு பெண்ணிற்கும் தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞருக்கும் காதல் திருமணம் தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்.

தமிழ் பெண் போலவே..
பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த சவுத்ரி ராஜ் மெக்சிகோவில் வேலை செய்து வந்தார். மெக்சிகோவில் டனியாலா என்ற பெண்ணும் சவுத்ரி ராஜுடன் பணியாற்றி வந்தார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல டனியாலாவிற்கும் சவுத்ரி ராஜூக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தனது திருமணத்தை தமிழ் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை டனியலாவிடம் தெரிவித்து இருக்கிறார். திருமணத்திற்கு இரு வீட்டை சேர்ந்த பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்த டனியாலாவின் பெற்றோரும் ஒப்புக்கொண்டனர். இதன்படி, இருவருக்கும் ஆனைமலையில் உள்ள மண்டபத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருமணத்தில் தமிழக பெண் போலவே பட்டுப்புடவையில் மணமகள் ஜொலித்தார். இந்து முறைப்படி சவுத்ரி ராஜ் தனது காதலியான மெக்சிகோ பெண்ணிற்கு தாலி கட்டினார். திருமணத்தில் பங்கேற்று இருந்த உறவினர்களும் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.












Click it and Unblock the Notifications