கண்ணு முன்னாடி 41 பேர் செத்தப்ப வீட்டுக்கு ஓடியவர் தலைவரா – விஜயை பொளந்து கட்டிய வேலுமணி
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக தவெக இடையே உச்சகட்ட வார்த்தை போர் நிலவி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதம் விஜய் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி (SP Velumani)விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.,பி வேலுமணி பேசுகையில், "தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தேவையான அதிக திட்டங்களை கொடுத்துள்ளேன். எப்போதுமே கோவைக்கு அதிக வளர்ச்சியை கொடுத்துள்ளோம். சாலைகள், மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றினோம். திமுக ஆட்சியில் கோவைக்கும், நம் தொகுதிக்கும் ஒரு திட்டத்தை கூட கொண்டு வரவில்லை.

பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்களா
இந்த 5 வருடங்களில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு தான் ஏற்றியுள்ளனர். அந்தக் கட்டணங்களை கட்டுவதை பற்றி யோசித்தாலே மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே ஓட்டு போட்டு விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. அது தமிழக மக்களிடம் ஒருபோதும் நடக்காது.
விலைவாசி, வரி உயர்வால் ஒவ்வொரு குடும்பமும் இந்த ஆட்சியில் ரூ.3-4 லட்சம் இழந்துள்ளனர். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் அது உங்களுக்கு மிச்சமாகியிருக்கும். சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவிலேயே நம்பர் 1 காவல்துறையாக தமிழ்நாடு இருந்தது. இப்போது காவல்துறையின் கையை கட்டிப் போட்டுள்ளனர்.
விஜய் மீது காட்டம்
நம் ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிக நிதி கொடுத்தோம். 2026 அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 சிலிண்டர்கள், கல்விக்கடன் ரத்து, பெண்களை தொடர்ந்து ஆண்களுக்கும் இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை மாதம் .ரூ.2,000, முதியோர் உதவித் தொகை ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம்.
இப்போது புதிதாக சில கட்சிகள் வந்துள்ளது. தவெக விஜய்க்கு சில சகோதரிகள், தம்பிகள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம். விஜயை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் எத்தனை பேர் கரூர் வந்தனர். 41 பேர் கூட்டத்தில் நசுங்கி விழுந்துவிட்டனர்.
இப்படியும் ஒரு தலைவரா
அதைப் பார்த்தும் எதுவும் செய்யாமல் சென்னைக்கு ஓடினார். இன்றைக்கு வரை கரூர் செல்லவில்லை. நம் கட்சியினர் ஒருவருக்கு சாதாரணமாக அடிபட்டால் கூட தூக்கி சென்று பார்க்கிறோம். 41 பேர் அப்படியே விழுந்து பிணமானார்கள். அங்கிருந்து ஓடிய விஜய் ஒரு மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அப்படிப்பட்டவரை ஆதரிக்கலாமா.
புரட்சி தலைவர் நடிகராக இருந்தார். நடிகராக இருப்பதால் இல்லாமல், நல்லவனாக மக்களை நேசிப்பவனாக இருப்பதால் தான் அரசியலுக்கு வந்தேன் என்று தலைவர் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள் செத்து விழுந்து பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது விட்டு சென்றவர் அவர். அவரை ஆதரித்தால் திமுகவுக்கு தான் சாதகமாகும்.
சினிமா வேறு.. அரசியல் வேறு
திமுக வரவே கூடாது என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். விஜய்க்கு வாக்களித்தால் திமுகவுக்கு வாக்களிப்பது சமம். விஜய் என் நண்பர் தான். ஆனால் சினிமா வேறு. அரசியல் வேறு. சினிமாவில் நடிப்பதை போல அரசியலிலும் நடிக்கிறார். விஜய்க்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பளிக்க கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications