கோவையில் தொடங்கிய திமுகவின் முப்பெரும் விழா! தலைமை உரையாற்றும் முக ஸ்டாலின்.. போக்குவரத்து மாற்றம்
கோவை: கோவையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா ஜூன் 14ஆம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில் சில காரணங்கள் காரணமாக முப்பெரும் விழா தேதி மற்றும் இடம் ஆனது மாற்றப்பட்டது. அதாவது முதலில் ஜூன் நான்காம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் திமுக முப்பெரும் விழா நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 15ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது.
பிரம்மாண்ட மேடை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக கூட்டணி கட்சியினர் அமரும் வகையில் இருக்கைகள், அவர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று நான்கு மணிக்கு திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இறுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரை ஆற்றுகிறார்.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக பொது செயலாளர் வைகோ,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் எம்எல்ஏக்களும் எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து விழா நடைபெறும் மைதானம் மற்றும் கோவை மாநகர் முழுவதும் திருவிழா கோலம் பூண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தோரணங்களும் கட்சி கொடிகளுமாக காட்சியளிக்கிறது. விழா நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் கோவை மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான போலீசாரும் எஸ்.பிக்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கோவை முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்றார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கொடிசியா மைதானத்திற்கு வரும் வழியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு முதலமைச்சர் முப்பெரும் விழாவில் உரையாற்றுகிறார்.
இதனையொட்டி கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் முதல் கொடிசியா வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வாகன ஓட்டிகள் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு, இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் திருச்சி சாலையிலிருந்து சூலூர் Y ரோடு சந்திப்பில் இருந்து சூலூர் குளம் முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு மற்றும் இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அன்னூர், கோவில்பாளையம், குரும்பபாளையம் ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் கோவில்பாளையம், காபிக்கடை, விளாங்குறிச்சி 4 ரோடு ஜங்சன் வழியாக சேரன்மாநகர் அடைந்து கொடீசியா செல்லவுள்ளது. எனவே, மேற்படி பகுதிகளுக்குச் செல்ல அல்லது மேற்படி சாலைகளின் வழியாக பயணங்களை மேற்கொள்ள இருக்கும் பொதுமக்கள், போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து தாங்கள் செல்லவேண்டிய பகுதிகளுக்கு எளிதில் செல்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை வகுத்துக்கொள்ளுமாறும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications