தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட குறையாது.. முதல்வர் பொய் சொல்கிறார்: அமித் ஷா!
கோவை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட குறைய வாய்ப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கு எம்பி தொகுதிகள் குறையும் என்று முதலமைச்சரும், அவரது மகனும் இல்லாத பிரச்சனையை பரப்புவதாக கூறிய அமித் ஷா, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது முழு பொய் என்றும் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 5ஆம் தேதி நடக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா கோவை வந்துள்ளார்.
இன்று கோவையில் பாஜகவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், திமுகவின் மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி. அந்த ஆட்சி சாதாரண ஆட்சியாக இல்லாமல், புதிய யுகத்தை உருவாக்கும் ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
2ஜி வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்துடன் நடந்து கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வதில் திமுகவினர் மாஸ்டர் டிகிரி முடித்துள்ளனர். அதேபோல் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படாது.
தென்னிந்திய மக்காளுக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். நிச்சயமாக தொகுதிகள் குறைய வாய்ப்புகளே இல்லை. நான் இங்கு உண்மையை கூறியுள்ளேன். எனக்கு நீங்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.1.52 லட்சம் கோடிதான் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி அளிக்கப்படுகிறது. அதனால் மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்பது பொய்யான தகவல். தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் வெளி வந்துவிடக் கூடாது என்பதற்காகதான் முதலமைச்சரும், அவரது மகனும் புதுப்புது பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள். திமுக ஆட்சி அவலங்களை பாஜக தொண்டர்கள் வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். மகாராஷ்டிரா, ஹரியானாவை விட பாஜக தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications