தங்கச் செயினால் வந்த ஆபத்து.. உஷார் மக்களே.. விசுவாசபுரத்தில் மூதாட்டிக்கு நேர்ந்த திக் திக் சம்பவம்
கோவை: கோவில்பாளையம் அருகே உள்ள விசுவாசபுரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் ஒருவர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் கழுத்தோடு இருக்காதே என்று பெரும்பாலான வீடுகளில் பெரியவர்கள் திட்டிக் கொண்டே இருக்கும் சம்பவங்களைப் பார்த்திருப்போம். கழுத்தில் செயினோ, மாலையோ எதையாவது அணிந்திருந்தால் தான் மங்களகரமாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தங்கத்தைப் போட்டிருந்தால் சாலையில் செல்லவே அச்சமடையும் நிலைதான் இன்றைய சூழ்நிலை உள்ளது.

எங்கு பார்த்தாலும் நகைப் பறிப்புச் சம்பவங்களாகத்தான் இருக்கின்றன. தங்கம் போட்டால்தானே பறிக்கிறார்கள் என்று கவரிங் நகைகளை பலர் அணிந்து வரும் நிலையில் அதனையும் தங்கம் என்று நினைத்து நகைப் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. ஒரு சில சமயங்களில் இது பயங்கர விபத்து மற்றும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள விசுவாசபுரத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இரண்டு சவரன் தங்க நகையை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில் அதனைப் போராடி பாதி நகையை மட்டும் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மீனா குமாரி (52). இவர் நேற்று மாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து வருவதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் மீனா குமாரியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது, மீனா குமாரி தங்கச் சங்கிலி கையால் இறுக்கமாகப் பிடித்துள்ளார். அப்போது, அந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மீனா குமாரி கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல, மதுரை, திருமலைநாயக்கர் மகால் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென தாலிச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதில், அந்தப் பெண் தங்கச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்த நிலையில் அந்த நபர்கள் சாலையில் தரதரவென இழுத்து செல்லும் காட்சி காண்போரை கதிகலங்கச் செய்தது.
இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அச்சமடையச் செய்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடைவீதிகளில் பொருள்கள், ஆடைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பலரும் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications