பொங்கலுக்குப் பிறகு இருக்கு ட்விஸ்ட்.. நாடே வியக்கப் போகுது.. ஹைப் ஏத்தும் செங்கோட்டையன்
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த பொதுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவரிடம் பேசிவிட்டு இன்று முடிவெடுக்கப்படும் என்றும், பொங்கல் முடிந்த பிறகு எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களத்தில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

கூட்டணி பிரச்சனையில் அதிமுக
ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் பொதுவெளியில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக இருந்த ஈரோடு பொதுக்கூட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் கூட்டம் என்பதால் போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்
இந்தப் பொதுக் கூட்டத்துக்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாக்ஸ் பாக்ஸாக பிரிக்கப்பட்டு இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பெண்களுக்கும் தனி பிரிவு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரம்மாண்டமாக செய்திருந்தார். ஒரு கட்சிக் கூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப பக்காவாக ஸ்கெட்ச் போட்டு முடிக்கப்பட்டிருந்தது.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: SIR குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும். ஈரோடு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர்.
பொங்கலுக்கு இருக்கு ட்விஸ்ட்
தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னுடைய தன்னாட்சியை நடத்துவார்கள். தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இல்லாத கட்சி என தமிழிசை கூறியிருக்கும் கருத்து குறித்த கேள்விக்கு, அது அவருடைய கருத்து அப்படிப்பட்ட கருத்து. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த பொதுக் கூட்டம் குறித்த கேள்விக்கு, இன்று மாலை விஜயிடம் பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம். எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications