பாஜகவே மன்னிப்பு கேட்ருச்சு.. பிரச்சனைய இதோட முடிச்சுக்கலாம்.. அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் அறிக்கை!
கோவை: மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டதற்காக தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம், தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம் என கோவை அன்னபூர்ணா உணவக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோவையில் கடந்த புதன்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசுகையில், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, கிரீம், ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்" என்று கூறினார்.
அன்னபூர்ணா சீனிவாசன் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. பலரும் மத்திய பா.ஜ.க அரசையும் ஜி.எஸ்.டி வரியையும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். காதால் கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவர் பாணியில் அவர் பேசியிருக்கிறார்.
கடந்த ஓராண்டாக ஒவ்வொரு உணவு வகைக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை அமைச்சர்களின் குழு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரியவர் ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதிகளாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. பாஜகவினரே பகிர்ந்த அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் உள்ள நிலையில் அன்னபூர்ணா சீனிவாசன், "நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று எழுந்து நின்று கைகூப்பும் காட்சிகள் இடம்பெற்றன.
இந்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. ஜிஎஸ்டி-யை எளிமைப்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பொதுவெளியில் வைத்த தமிழக தொழிலதிபரை பாஜகவினர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்ட நிலையில் தமிழக பாஜக-வின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்திலும் இதற்கு மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தை மேலும் அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா உணவகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அன்னபூர்ணா உணவக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனரும் தமிழ்நாடு உணவக சங்கத்தின் தலைவருமான சீனிவாசன் கலந்துகொண்டார். உணவகங்களிலும் பேக்கரிகளிலும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகித மாறுபாடு இருப்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அவர் பேசியது தவறாக எதுவும் புரிந்துகொள்ளப்படக் கூடாது என தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தவறான புரிதல்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. தமிழக பாஜக இதற்கு மன்னிப்பு தெரிவித்ததுடன் விடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி.
தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த பிரச்னையை முடித்து அடுத்த பணியை தொடர விரும்புவதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த வாடிக்கையாளர்கள், மக்களுக்கு நன்றி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications