ஜஸ்ட்மிஸ்.. உயிரே போயிருக்கும்.. அஞ்சாமல் ரவுடி சஞ்சய்ராஜாவை சுட்ட போலீஸ்..கோவையில் நடந்த திக்திக்
ரவுடி சஞ்சய் ராஜா துப்பாக்கியால் சுட்டபோது கடவுள் அருளால் குண்டு போலீசார் மீது படவில்லை. குண்டு பாய்ந்திருந்தால் உயிர் கூட போய் இருக்கும் என கோவை துணை ஆணையர் நந்தீஸ் பரபர தகவல்
கோவை: கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட் சுட்ட நிலையில் போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். முன்னதாக சஞ்சய்ராஜா துப்பாக்கியால் சுட்டபோது அதிர்ஷ்டவசமாக குண்டு போலீசார் மீது பாயவில்லை எனவும், பாய்ந்திருந்தால் உயிரே போய் இருக்கும் எனவும் கோவை துணை போலீஸ் ஆணையர் நந்தீஸ் கூறினார். மேலும் சஞ்சய் ராஜாவுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? கோவையில் இன்று காலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு நடந்தது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. ரவுடியான இவரை கடந்த மாதம் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். இதையடுத்து வழக்கில் தொடர்புடையவர்கள் அரக்கோணம், எழும்பூர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் காவலில் விசாரணை
இந்நிலையில் தான் இந்த வழக்கில் சஞ்சய் ராஜா என்பவர் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டராகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சஞ்சய் ராஜாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை துவங்கினர்.

காலையிலேயே துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில் விசாரணைக்காக கரட்டுமடம் பகுதிக்கு சஞ்சய் ராஜாவை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள் போலீசார் மீது பாயவில்லை. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை பிடித்த போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது?
இந்நிலையில் தான் கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர் நந்தீஸ் விளக்கம் அளித்துள்ளார். சஞ்சய் ராஜா எப்படி போலீசாரை துப்பாக்கியால் சுட்டார்?, போலீசார் ஏன் அவரை துப்பாக்கியால் சுட்டனர்? என்பது பற்றியும், அங்கு நடந்த பரபரப்பு சம்பவம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இதுபற்றி போலீஸ் துணை ஆணையர் சந்தீஸ் கூறியதாவது: சரவணம்பட்டி பகுதி சஞ்சய் ராஜா கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்விரோதத்தில் கடந்த மாதம் துப்பாக்கியால் ஒருவரை கொலை செய்தது தொடர்பான வழக்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராஜா தான் ஏ1.

துப்பாக்கி பறிமுதல் செய்ய...
சஞ்சய்ராஜாவிடம் மொத்தம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்தனர். இவரிடம் இருந்த ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. 2வது துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்றோம். அப்போது சரவணம்பட்டியில் தான் வசித்த நிலையில் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். இதையடுத்து இன்று காலை துப்பாக்கியை பறிமுதல் செய்ய அவரே போலீசாரை அழைத்து சென்றார். மேலும் துப்பாக்கி மறைத்து வைத்திருக்கும் இடத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

2 முறை சுட்ட சஞ்சய் ராஜா
அப்போது கல்லுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்து அவர் திடீரென்று சுட்டார். ஏற்கனவே லோட் செய்யப்பட்டு இருந்ததால் அவர் இன்ஸ்பெக்டர், எஸ்ஐஸை நோக்கி வேகமாக 2 முறை சுட்டார். இதனை போலீசார் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கடவுள் அருளால் குண்டு யார் மீதும் படவில்லை. மரத்தின் நடுப்பகுதியை துளைத்தது போல் உள்ளது.

காலில் பாய்ந்த குண்டு
இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். எஸ்ஐ சந்திரசேகர் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சஞ்சய்ராஜாவின் காலில் குண்டு பாய்ந்தது. சுருண்டு விழுந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

உயிர் கூட போய் இருக்கும்
மேலும் சஞ்சய் ராஜாவிடம் இருந்தது ரிவால்வர். இது நாட்டு துப்பாக்கி வகையை சேர்ந்தது போல் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதாக கூறி அவர் 2 ரவுண்டு சுட்டார். இது மரத்தை துளைத்துள்ளது. அங்கும் ஆய்வு மேற்கொள்கிறோம். மேலும் இந்த சம்பவத்தில் போலீசில் யார் மீதும் துப்பாக்கி குண்டு பாயவில்லை. பாய்ந்திருந்தால் உயிர் கூட போய் இருக்கலாம். ஏனென்றால் சஞ்சய் ராஜா மார்பை நோக்கி தான் துப்பாக்கியால் சுட்டுள்ளார்'' என விவரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications