மாஜி அமைச்சரின் நிழல் Vs அதிமுக பெண் பிரமுகர்! மேயர் தேர்தல் சடுகுடு! பின்னணி என்ன?
கோவை: அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக களமிறங்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழல் என வர்ணிக்கப்படும் வடவள்ளி சந்திரசேகர் தனது மனைவி டாக்டர் ஷர்மிளா சந்திரசேகரை மேயராக்க காய் நகர்த்தி வருகிறார்.
இதேபோல் வேலுமணியின் மற்றொரு தீவிர விசுவாசியான சோனாலி பிரதீப் என்பவரும் மேயர் வேட்பாளர் ரேஸில் இருந்து வருகிறார்.

கோவை மாநகராட்சி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகரமாக திகழ்கிறது. தலைநகர் சென்னைக்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக கருதப்படும் கோவையில், யார் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தான் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுகவை பொறுத்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை மேயருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவில் யார்?
இதேபோல் அதிமுகவில் மேயர் வேட்பாளராக போட்டியிட ஒரு பெரிய பட்டாளமே விருப்பமனு கொடுத்து காத்திருக்கிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒரு காலத்தில் வலதுகரமாக திகழ்ந்த வடவள்ளி சந்திரசேகர் தனது மனைவி டாக்டர் ஷர்மிளா சந்திரசேகரை மேயராக்க முயற்சி செய்து வருகிறாராம். இதனிடையே சந்திரசேகர் குறித்த அண்மைக்கால சில புகார்கள் மாஜி அமைச்சர் வேலுமணியை டென்ஷன் ஆக்கியதால் சீட்டுக்காக இன்னும் அவர் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளதாம்.

இளம்பெண்கள் பாசறை
கோவை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் சோனாலி பிரதீப்பும் கோவை மேயர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறாராம். இவரது தந்தை 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் தான் மறைந்தார். பூர்வீகம் குஜராத் என்றாலும் கோவைக்கு ஒரு தலைமுறைக்கு முன்னரே சோனாலி குடும்பம் குடிபெயர்ந்துவிட்டது. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் முக்கிய சீடராக இருந்த சோனாலியின் தந்தை அவரது இறுதிகாலம் வரை எந்த முக்கியப் பொறுப்புகளும் வகித்ததில்லையாம்.

இரட்டை இலை
கல்லூரி பேராசியராக பணியாற்றிய சோனாலி பிரதீப், தனது தந்தை மறைவை தொடர்ந்து அதிமுகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு புதியவர் சோனாலி என பலரும் விமர்சிக்கும் நிலையில், தாம் யார், தமது தந்தை அதிமுகவில் எப்போதிருந்து உறுப்பினராக இருந்தார், என்னென்ன செய்திருக்கிறார் என்ற புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார் சோனாலி. மேலும், அதிமுக தனக்கு புதிதில்லை என்றும் பள்ளிப்பருவத்திலேயே இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டு சென்றிருக்கிறேன் எனவும் கூறி எதிர்தரப்பினரை ஆஃப் செய்கிறார்.

யாருக்கு வாய்ப்பு
டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர், சோனாலி பிரதீப் ஆகிய இருவரை தவிர்த்து இன்னும் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் கோவையில் அதிமுக மேயர் வேட்பாளராக களமிறங்க தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் யாருக்கு இந்த வாய்ப்பை கொடுக்கப் போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications