இலங்கை:பசில் ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சி-விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!
கொழும்பு: இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்ற ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து நாட்டை விட்டு தப்பி ஓட முடியாமல் மீண்டும் வீட்டுக்கே திரும்பினார் பசில் ராஜபக்சே.
இலங்கையில் பொதுமக்களின் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிப் போட்டுள்ளது பொருளாதார பேரழிவு. இப்பேரழிவில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க ஜனாதிபதி, பிரதமரால் முடியவில்லை. இதனால் மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை பல மாதங்களாக நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த கிளர்ச்சியால் முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். பின்னர் இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். ஆனாலும் பொருளாதார நிலைமை சீரடையாததால் மக்கள் போராட்டம் உக்கிரமடைந்தது.
இப்போராட்டத்தின் உச்சகட்டமாக ஜூலை 9-ந் தேதி கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி மாளிகையைவிட்டு கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடினார். அவர் தற்போது இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ளார் என்றும் நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கேவும் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
Passenger at Katunayake airport protest over Basil Rajapaksa pic.twitter.com/2by8X9UZNd
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 12, 2022
அதேநேரத்தில் மக்கள் கிளர்ச்சிகளுக்கு அஞ்சி இலங்கை அரசியல் தலைவர்கள், நாட்டை விட்டு தப்பி ஓடிவருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே இன்று காலை வெளிநாட்டுக்கு தப்பி ஓட கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றுள்ளார்.
பசில் ராஜபக்சே தப்பி ஓட முயற்சிப்பதை தெரிந்து கொண்ட பொதுமக்கள், அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தினர். ஆனால் தமது ஆவணங்களை பரிசீலனை செய்து வெளிநாட்டுக்கு அனுப்புமாறு பசில் ராஜபக்சே அதிகாரிகளிடம் கெஞ்சினார். அதிகாரிகளோ பசில் ராஜபக்சேவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். இதனால் பசில் ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பி ஓடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து வேறுவழியே இல்லாமல் பசில் ராஜபக்சே வீட்டுக்கே திரும்பினார். பசில் ராஜபக்சேவின் மனைவி ஏற்கனவே இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications